பக்கம் எண் :

128உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


(இ - ள்.) “அத்துறவியின் மொழி கேட்ட எம் மன்னன் மகிழ்ந்து தன் கேளிருடனிருந்து செம்மையாக ஆராய்ந்து தெளிந்த பின்னர் என்னையழைத்து ‘நீ அம்முனிவன் கூறியாங்கு அப்பொய்கைக் கரையை அடைந்து காண்!” என்று கூறி விடுத்தனன். அரசன் பணித்தாங்கே யானும் இங்கு வந்துபெருமானே! உம்மைக் கண்டேன். ஆதலால் பெருமான் என்னுடன்எழுந்தருளுக!” என்று வேண்டினன் என்க. (42)

நரவாகனனை நீலவேகன் எதிர்கொள்ளல்

284. போவ தேபொருள் புண்ணி யற்கொண்டு
தேவ னேயெனச் செல்வ னுஞ்செலும்
காவலன் னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவ லாளரோ டினிதி னெய்தினான்.

(இ - ள்.) பெருமானே! அநங்கவிலாசனையை மணந்து வித்தியாதரருலகையும் ஆள்கின்ற ஆகூழுடைய நும்மை அழைத்துக் கொண்டு போவதே யான் வந்த காரியமாகும்; ஆதலாற் போந்தருளுக! என்று வேண்டவே அந்நரவாகனனும் செல்வானாக, அவன் வரவுணர்ந்த நீலவேக மன்னனும் எதிர் கொண்டு கண்டு கண் களிகூர்கின்ற தன் ஏவலாளரோடும் தன்னரண்மனையை அக்கோமகனோடும் எய்தினான் என்க. (43)

நீலவேகன் நரவாகனனுக்கு முகமன் மொழிதல்

285. கன்னல் விற்கணை யில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்ன னின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.

(இ - ள்.) கரும்பு வில்லும் மலர்க்கணையும் இல்லாமல் உருக் கொண்டு வந்த காமவேள் போன்றவனும் ஆடவர்க்கியன்ற நல்விலக் கணமெல்லாம் பொருந்திய காளைப் பருவத்தினனுமாகிய நரவாகனனுக்கு அந்நீலவேகன் மனமகிழ்ந்து இனிய முகமன்மொழிகள் கூறி மகிழ்வித்த பின்னர் அமைச்சரைத் தனியிடத்தே அழைத்து அநங்கவிலாசனையின் திருமணம் பற்றி அவர் கூறவனவற்றையும் பேணிக் கேட்பானாயினன் என்க. (44)

அநங்கவிலாசனை சுயம் வரம்

286. தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.