பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்129


(இ - ள்.) அவ்வமைச்சர் ஆராய்ந்து கூறுபவர் பிற வித்தியாதர வேந்தருணராமல் இவ்விருவர்க்கும் தகுதியோடு யாம் திருமண வினை நிகழ்த்தினால் நிலவுலகத்து மக்கட் பிறப்பினனுக்கு இவன் மகட்கொடை நேர்ந்தனன் என்பது தலைக்கீடாக நம் வித்தியாதர வேந்தர் ஒருங்கு கூடி நமக்குத் தீங்கு செய்ய முற்படுபவர் என்று கூற, மன்னன் மகிழ்ந்து தன்னினத்து மன்னர்க்கெல்லாம் அநங்கவிலாசனைக்குச் சுயம்வரம் என்னும் செய்தியோடு தூதுவரை விடுத்தனன் என்க. (45)

அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலை சூட்டுதல்

287. மன்ன ரீண்டியே வந்தி ருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகி னேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.

(இ - ள்.) சுயம்வரச் செய்தி கேட்ட வித்தியாதர வேந்தர் மைந்தரெல்லாம் வந்து சுயம்வர மன்றத்தே குழுமியிருக்கும் பொழுது அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய அமிழ்தத்தை நிகர்த்த அந்த அநங்கவிலாசனை தானும்ஒளிதிகழும் மணமாலையைச் சூழ்ச்சியோடு கைக் கொண்டு சென்று முற்கூறப்பட்ட அந்நரவாகனன் தோளிலே சூட்டி மகிழ்ந்து நின்றனள் என்க. (46)

மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்

288. அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திரும ணஞ்செய்து செல்வ னின்புற
இருவ ரும்புணர்ந் தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம்.

(இ - ள்.) அவ்வித்தியாதர வேந்தனாகிய நீலவேகன் ஊக்கமிகுந்து நன்றாக அமைத்த திருமண வேள்விச் சடங்கின்கண் நரவாகனன் அநங்கவிலாசனையைத் திருமணஞ் செய்து மகிழ, அம் மணமக்கள் இருவரும் மனமொன்றிக் கூடி இன்ப நுகர்ந்திருந்த பொழுது மானசவேகன் நரவாகனனுக்குப் பெரிதும் அஞ்சிய மனத்தையுடைய னாயினன் என்க. (47)

குறிப்பு:--இவ்விடத்தில் மானசவேகன் நரவாகனனுக்கு அஞ்சி மதன மஞ்சிகையைக் கொணர்ந்து நரவாகனன் பால் விட்டுப் போயினன் என்னும் பொருளுடைய செய்யுள் ஒன்று விடுபட்டிருத்தல் வேண்டு மென்று தோன்றுகின்றது.

உத--9