நரவாகனன் திருவுலா
289. வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காம னேயெனக் கன்னி மங்கையர்
தாம ரைக்கணாற் றான்ப ருகுநாள்.
(இ - ள்.) வீரப்பண்புமிக்க
நரவாகனன் வெள்ளி மலைமிசை உயர்ந்து விளங்கும்
நாகபுரம் என்னும் நெடிய நகரத்தின்கண் சினமுடைய
களிற்றியானையிலேறிச் திருவுலாச் சென்றானாக;
அப்பொழுது அந்நகரத்துக் கன்னி மகளிர் இவன்
காமவேள் போலும் என்று கருதி அவன் பேரழகாகிய
அமுதத்தைத் தாமரைமலர் போன்ற தம் கண்ணாகிய
வாயாலே பருகி இன்புறா நின்றனர். இங்ஙனம்
நிகழ்வுழி; என்க. (48)
நரவாகனன் எய்திய பேறுகள்
290. நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர்தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முத னிதிக ளொன்பதும்.
(இ - ள்.) வித்தியாதரருலகத்தை
முழுதும் ஆள்வதற்கெண்ணிய புகழாளனாகிய அந்
நரவாகனன் அந்நாட்டினை வெல்லுதற்கு அழகிய நாகர்
மலை மேல் சென்றனன், மாலை மார்பனாகிய
அம்மன்னனைக் கண்ட அம்மலை நாகர் முறையோடு
எதிர் சென்று வரவேற்றுக் கேளிராயினர்;
பின்னர்ச் சக்கர நிதி முதலிய ஒன்பது வகை
நிதிகளையும், என்க. (49)
இதுவுமது
291. நாம விந்திர னன்க ருள்செயக்
காம னுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமி னாலிரண் டொன்ற வாயிரம்.
(இ - ள்.) நரவாகனன்பாற்
பேரன்புடைய புகழுடைய தேவேந்திரன் குற்றமற்ற
தேவமகளிர் எண்ணாயிரவரையும் அவன்பாற்
சேர்க்கும்படி நன்கு வழங்கினமையாலே தேவர்கள்
கொணர்ந்து காமவேள் போல்பவனாகிய அந்
நரவாகனன்பால் வந்து கண்டு வாழ்த்தி அவற்றை
வழங்கிப் பணியா நிற்ப என்க.
|