பக்கம் எண் :

134உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


ஒப்பற்ற ஆணையையுடைய அம்மன்னன் அவனுக்கு முடிசூட்டியருளினான் என்க. (59)

நரவாகனன் வித்தியாதர ருலகம் போதல்

301. தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்தி ரன்றனூ ரியல்பி னேகினன்.

(இ - ள்.) பின்னர்த் தந்தையாகிய உதயணகுமரன் மேல் குறைவில்லாத பேரன்பினாலே வந்த நரவாகனன் அவனைப் பிரிதற்கு மனத்திலே நினைந்து வெவ்விய துயரமுடையனாய் அவ்வுதயணகுமரன் விடை கொடுப்பக் கோசம்பியினின்றும் புறப்பட்டுத் தேவேந்திரன் நகரமாகிய அமராபதிக்கு முறைமையோடு சென்றனன் என்க. (60)

நரவாகனன் வித்தியாதர ருலகம் புகுதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

302. செலவநற் குமரன் சென்று

தெய்வவிந் திரனைக் கண்டு

செல்வநல் வாமன் பூசைச்

சீர்கண்டு வணக்கஞ் செய்து

செல்வவிந் திரன னுப்பத்

திருமணித் தேரி னேறிச்

செல்வமார் புரம்பு குந்து

சிறப்பினோ டிருந்தா னன்றே.

(இ - ள்.) செல்வச் சிறப்பு மிக்க நரவாகனன் அமராபதி நகர்க்குச் சென்று ஆண்டுத் தேவர் கோமானாகிய இந்திரனைக் கண்டு வணங்கி அத் தெய்வ நாட்டின்கண் அருகக் கடவுளுக்குத் தேவர்கள் செய்யும் வழிபாட்டுச் சிறப்பினையுங் கண்டு அக்கடவுட்கு வணக்கஞ் செய்து பின்னர், செல்வ மிக்க அவ்விந்திரன் சிறப்புடன் வழிவிட அழகிய மணித் தேரில் ஏறிச் செல்வச் சிறப்பு மிக்க வித்தியாதர நாட்டுக் கந்தருவபுரத்தே சென்று சிறப்போடு அரசு புரிந்தனன் என்க. (61)

ஐந்தாவது நரவாகன காண்டம் முற்றும்.