களிற்றியானைக்கு அப்பொழுது
நன்ஞானம் தோன்றுதலாலே தன் மன்னனாகிய
உதயணகுமரனுடைய அரண்மனையை நினைத்து மீண்டு சென்று
அவ்வரண்மனை மதில் மாடவாயிலிலே அமைதியாக
நின்றது என்க. (25)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
உதயணகுமரன் அக்களிற்றைக் காண வருதல்
328. கடையுடைக் காவ லாளர்
கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று
நரபதி மனையைச் சார்ந்து
நெடுவரை போல நின்ற
நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப்
பெருமக னெழுந்து வந்தான்.
(இ - ள்.) அரண்மனையின்
கோபுரவாயிற் காவலர் யானையின் அமைதி நிலை
கண்டு கதவைத் திறந்து அதனை அரண்மனைக்குள்
விடுதலாலே அக் களிற்றியானை வீதிவழியே
அரண்மனையின் நடு விடத்தை எய்தி ஆங்குள்ள
மன்னன் மாளிகை முன்றிலையடைந்து நெடிய மலைபோன்று
அமைதியாக நின்ற தன்மையினை அம் மாளிகையின்
வாயில்காவலர் கண்டு அரசன்பாற் கூற அவ்வரசனும்
அதனைக் காணும் அவாமுற்பட இருக்கையினின்றும்
எழுந்து யானையின்பால் வந்தனன் என்க. (26)
யூகி உதயணனை அக்களிற்றின் மிசை ஏறுக
வென்னல்
329. திருமுடி மன்ன னின்ற
திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை
மன்னவ னினிதி னோக்கப்
பெருவிரல் யூகி சொல்வான்
பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகும்
மன்னநீ யேற வென்றான்.
(இ - ள்.) அழகிய முடிக்கலன் அணிந்த
அம்மன்னவன் அந்த யானை நின்ற நிலையினைக்கண்டு
வியந்து ஆங்கு வந்த அமைச்சரை இனிதாக நோக்க,
அவர் தம்முள் பெரிய வெற்றியையுடைய
|