சூழ்ந்து வருமாறு அம்முனிவர்பாற் சென்று
கண்டு இன்பமிக்கவனாய் அந்நறு மணமலர்
முதலியவற்றைக் கொண்டு அம் மாதவருடைய அடிகளை
வழிபாடு செய்து வணங்காநிற்ப அம்முனிவர் தாமும் “ஈண்டெழுந்தருள்க!”
என்று ஒர் இருக்கையைக் காட்டலாலே
அவ்விருக்கையின்கண் இனிது வீற்றிருந்து அவர்
கூறுகின்ற சிறந்த அறவுரைகளை விழிப்புடன்
கேட்டனன் என்க. (29)
முனிவர் கூறும் அறவுரைகள்
332. அறத்திற முனிவன் சொல்ல
வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள்
பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந்
தேர்ந்துபஞ் சாத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள்
வரிசையி னேழ தாமே.
(இ - ள்.) முனிவன்
அறத்தினிலக்கணங்களை விரித்துக் கூற
உதயணமன்னனும் ஆர்வத்தோடு கேட்பானாயினன்,
பெறுதற்கரிய அருங்கலங்களாகிய நன்ஞானம்
நற்காட்சி நல்லொழுக்கம் என்பனவற்றைப்
பேணுதல் யாவர்க்கும் அரியசெயலேயாம்.
அறிவாற்றலாலே அறிதற்கியன்ற சீவன் புற்கலம்
தருமம் அகருமம் ஆகாயம் என்னும்
ஐந்தத்திகாயங்களும் இவற்றோடு காலஞ்
சேர்தலாலாகிய அறுவகைப் பொருள்களும் மீண்டும்
அறிதற்குரிய சீவன் அசீவன் ஆசுவரம் சம்வரம்
நிச்சரம் கட்டு வீடு என்னும் முறைமையாற்
கூறப்படும் எழுவகைப் பொருள்களும் என்க. (30)
இதுவுமது
333. சீரிய நவப தங்கள்
செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும்
வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு
மொருங்குபன் னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி
யதன்வழி யொழுக்க மாகும்.
|