பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்147


(இ - ள்.) சிறப்புடைய சீவன் அசீவன் புண்ணியம் பாவம் ஆசுவரம் நிச்சரம் கட்டு வீடு என்னும் ஒன்பது பொருளும் ஆறுவகைச் சீவநிகாயங்களும் வீரியமுடைய பொறிகளாறும் அவற்றை அடக்க வேண்டிய அடக்கமாகின்ற பத்துவகை அறங்களோடு பன்னிரண்டு வகைச் சிந்தையும் ஆகிய இவையிற்றை யெல்லாம் மேலோர் அறிந்தவழி நல்லொழுக்கம் உண்டாகும் என்றார் என்க. (31)

இதுவுமது

334. தலைமகார் சிறப்புச் செய்து

தன்மைநல் வாய்மை யான

கலையினற் கரையைக் கண்டு

காதனூல் வழியைச் சென்று

மலைவில்சீர் மாத வர்க்கு

வண்மையிற் றானஞ் செய்தார்

தொலைவிலாப் பிறவி நீங்கித்

தொல்சுகக் கடலு ளாழ்வார்.

(இ - ள்.) தலைமையுடைய மக்களாய்த் தோன்றி அப்பிறப்பிற்குரிய சிறப்புச் செயல்களைச் செய்து நற்பண்பென்னும் உண்மை பொதிந்த மெய்ந் நூல்களின் நல்ல எல்லை தேர்ந்து அன்போடு அம்மெய்ந்நூல் கூறும் நெறியிலே சென்று மாறுபாடில்லாச் சிறப்பையுடைய பெரியோராகிய துறவோர்க்கு வள்ளன்மையினாலே தானம் செய்தவர் ஒழியாத பிறப்பிணியினின்றும் நீங்கிப் பழைமையான வீட்டின்பம் என்னும் கடலிலே மூழ்கித் திளைப்பர் என்றார் என்க.(32)

இதுவுமது
கலிவிருத்தம்

335. தரும வீரர் தரும முரைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன்
மருவு வல்வினை மாசி னுதிர்த்திட
தெரிச னவ்விளக் கஞ்சிறப் பானதே.

(இ - ள்.) தருமவீரர் என்னும் அம்முனிவர் இவ்வாறு நல்லறங்களை விரித்துக் கூறுதலாலே பெருமையுடைய அவ்வுதயண வேந்தன்றானும் அவர்பால் நன்மதிப்பும் அன்பும் உடையனாய் மீண்டும் அவர் திருவடிகளை வணங்கினன். அம்மன்னவனுடைய வலிய வினைகள் தாமும் துகள்பட்டுதிர்ந் தொழிந்தன. உதயணனுக்கு நன்ஞானம் முதலியன நன்கு விளங்கிச் சிறப்புற்றன என்க. (33)