உதயணன் அம்முனிவன்பால் களிற்றின்
வரலாறு வினவுதலும் முனிவன் கூறலும்
336. காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன் னாட்டிடை
வேதி யர்குழு வாய்விளங் கும்புரம்.
(இ - ள்.) பகைவரைக் கொல்லும்
வேற்படையினையுடைய அவ்வேந்தன் அம்முனிவரை
நோக்கிப் “பெரியீர்! இக்களிற்றியானை
இவ்வாறு சினந்தெழுதற்குக் காரணம் என்னையோ?”
என்று வினவலும், அம்முனிப்பெரியோன் கூறுவான்-- “வேந்தே!
கேள், மகரந்தத்தையுடைய மலர்ப்பொழின் மிக்க
சாலி என்னும் நல்ல நாட்டின்கண்
பார்ப்பனக்குடிகளே கூட்டமாய் வாழாநின்ற
விளக்கமுடைய ஊரொன்றுளதுகாண்,” என்றான் என்க.
(34)
இதுவுமது
337. கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னெனும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள்.
(இ - ள்.) “கடகம் என்னும்
பெயரையுடைய அவ்வூரின்கண் விடபகன் என்னும்
அன்புமிக்க அந்தணன் ஒருவனும் அவனுடைய மனைக்
கிழத்தியாகிய மின்னிடையுடைய சானகி என்னும்
பார்ப்பனியும் இறுதியில்லாத காமமுடையவராய்க்
கூடி வாழ்கின்ற நாளிலே” என்றான் என்க. (35)
இதுவுமது
338. அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சின னில்லையே.
(இ - ள்.) அவ்வந்தணன்
‘அமரி’ என்னும்
பெயரையுடைய அழகிய முலையினையுடைய ஒரு
கணிகையின்பாற் றன் மனத்திலெழுந்த காமத்தாலே
பெரிதும் வருந்தி அவளோடுகூடி இன்பத்
தழுந்திக் கிடப்பவன் தன் பிறப்பிற்குரிய சமய
வேள்வியையும் அது சார்ந்த பிற
அறவொழுக்கங்களையும் அஞ்சாது கைவிட்டனன்”
என்றான் என்க. (36)
|