பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்151


என்னும் பெயரையுடையவளுமாகிய மடந்தை மனமுவந்து ஒப்பற்ற புகழையுடைய கோமுகன் என்பவனை ஈன்றாள்” என்றார் என்க. (42)

இதுவுமது

345. காம னெனனுமக் காளைகைத் தாய்பெயர்
சோம சுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மக னன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர்.

(இ - ள்.) காமவேளை யொத்த கோமுகன் என்னும் அக்கோமகனும் அவன் செவிலித் தாயாகிய சோமசுந்தரி என்னும் பெயரையுடைய சுரிந்த கூந்தலையுடைய மடந்தையின் மகனாகிய அச்சந்தரும் வேலேந்திய மறநலம் பெற்ற விசையன் என்பானும் ஒருவர்க் கொருவர் பாதுகாவலாகிய நண்புடையராகச் சிறந்து திகழ்ந்தனர் என்றார், என்க. (43)

இதுவுமது

346. ஒழியாக் காத லுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சிய னாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயிர் ஓங்கிநீ யாயினை.

(இ - ள்.) “அவ்விருவரும் தீராத பேரன்புடனே கூடி விளையாடிக் குற்றமற்ற நல்வின்பங்களையும் எல்லையின்றி நுகர்வாராயினர். அவருள் கெடுதலில்லாத நற்காட்சியினையும் அச்சந்தரும் வேற்படையினையும் உடைய கோமுகன் என்பான் நல்லுயிர் நீங்கிப் புகழால் ஓங்கிய நீயாகப் பிறந்தான்,” என்றார் என்க. (44)

இதுவுமது

347. விசையன் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையி னாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே.

(இ - ள்.) “எஞ்சிய அவ்விசையனும் உயிர் நீத்து அந்தணனாகி அப்பிறப்பிலே வசையோடே மிக்க காமத்தாலே மயங்கிய மயக்கங் கூடியதாலே இறப்புற்று இந்நகரத்தே வந்து அசைந்துண்ணுமியல்புடைய இக் களிற்றியானையாகப் பிறந்தான்” என்றார் என்க. ஆயினது: திணைவழு. (45)