பக்கம் எண் :

152உதயணகுமார காவியம் [ துறவுக காண்டம்]


இதுவுமது

348. மித்தி ரன்முன்பு வீறுநற காதலால்
அத்தி மேலுனக் கன்புமுண் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மேரெழு நாளென்றார்.

(இ - ள்.) “வெற்றியையுடைய வெள்ளைக்குடையினையுடைய வேந்தே! முன்னொரு பிறப்பிலே இக் களிறு உனக்கு நண்பன் ஆதலால் அப்பிறப்பிலே மிக்க பேரன்புடையையாயிருந்தமையாலே இக்களிற்றின் மேல் உனக்கு அன்புண்டாயிற்றுக் காண்! உதயண! இந்தக் களிறு இன்னும் வாழும் நாள்கள் ஏழே எஞ்சியிருக்கின்றன; அவ்வேழுநாளும் கழிந்தால் இஃதிறந்துபோம்” என்றும் கூறினர்; எனக. (46)

உதயணன் வருந்திக் கூறுதல்

349. திருந்து ஞானத்திற் றேர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான்.

(இ - ள்.) திருந்திய மெய்யுணர்வினாலே தெளிந்த அத்துறவியின் மொழிகளை மனம் பொருந்தக் கேட்ட உதயண வேந்தன் ஏழு நாளில் அக்களிறு இறந்தொழியும் என்றுணர்ந்தமையாலே பெரிதும் வருந்தி அந்த யானையின்பால் சென்று அதன் மிசை அழுந்திய தனது பேரன்பாலே கூறுகின்றவன் என்க. (47)

உதயணன் செயல்

350. வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீறிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே.

(இ - ள்.) “களிறே! யான் நின்னைக் கயிற்றால் ஏனைய யானையைக் கட்டுமாறே கட்டியும் வெவ்விய செவ்விய இருப்பு முள்ளினை நீ வருந்தி அலறும்படி நின் உடம்பிற் பாய்ச்சியும் மிகையாகவே நின் காலில் விலங்கு பூட்டியும் நின்னைச் சிறை செய்தேன். அறியாமையால் யான் செய்த பிழைகளைப் பொறுத்தருளுக!” என்று வேண்டினன் என்க. (48)