இதுவுமது
351. காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பி னிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா.
(இ - ள்.) தன் பேரன்பிற்குரிய அந்த
யானையைப் பின்னரும் அவ் வேந்தன் தன் கைகளாலே
தீண்டி மிகவும் உடலெங்கும் தடவியன்பு செய்ய
அக்களிறுதானும் மிகவும் பொலிவுடையதாய் அவனை
வணங்கலாலே, அது கண்ட மன்னன் யானைப்பாகனை
நோக்கி இக் களிற்றியானையை விழிப்புடனிருந்து
பேணி அதன் நிலைமை.யை எனக்கு அறிவித்திடுக! என்று
பணித்தென்க. (49)
உதயணன் அரண்மனை புகுதல்
352. யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன்.
(இ - ள்.) இவ்வாறு
யானைப்பாகர்க்குக் கட்டளையிட்டபின் அழகிய
அம் மன்னன் தேனும் ஆனெயும் விரவியதன்ன
பயன்மிக்க அழகிய மொழிகளையுடைய அந்த முனிவருடைய
திருவடிகளை அன்போடு தொழுது அவணின்றும் நீங்கித்
தன் படைகள் சூழ்ந்துவரச் சென்று தன் அரண்மனை
புகுந்தனன் என்க. (50)
உதயணகுமரன் இறைவழிபாடு செய்தல்
ஆசிரிய விருத்தம்
353. சீலமும்வ ளங்களுஞ்
செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர்வந்து
கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா
யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசி னெய்யருந்திப்
பாரரசன் செல்லுநாள்.
|