(இ - ள்.) வழிநாட் காலையில்
யானைப்பாகர் அரசன்பால் வந்து வணங்கி
அக்களிற்றியானையின் நல்லொழுக்கங்களையும்
அதன் பண்பு வளங்களையும் உணர்ந்து அம்மன்னனுக்குக்
கூறா நிற்ப அதுகேட்ட மன்னன் மனவமைதியுடையவனாய்
அருகக் கடவுளின் திருக்கோயிலுக்குச் சென்று
நாடோறும் வலம் வந்து அவ் விறைவனை வணங்கிய
பின்னரே பாலடிசிலை நெய் பெய்தருந்தி இனிதே
வாழ்கின்ற நாளிலே என்க. (51)
உதயணன் செயல்
354. சல்லகீணை கொண்டுடன்
சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய்
நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ்
சூழ்ந்தவனி போகமும்
நில்லலவென் றுணர்ந்தன
னேமியனைவா வென்றனன்.
(இ - ள்.) அக் களிற்றியானையின்
அகவை நாள் ஏழும் கழிந்தவுடன் அது மெய்ஞ்ஞானம்
பிறந்து சமாதி கூடுதலாலே அவ் விலங்குப்
பிறப்பிற் றீர்ந்து நன்மையுடைய மேனிலை யுலகத்தே
சென்று தேவப் பிறப்பெய்தினமையையும் உதயணன்
முனிவர்பாற் கேட்டுணர்ந்து சொல்லுதற்கரிய
புகழையுடைய அவ் வேந்தனும் தன்னுள் ஆராய்ந்து
இவ்வுலக வின்பங்கள் நிலையுதல் உடையன வல்ல, என்று
உணர்ந்து வித்தியாதர சக்கரவர்த்தியாகிய
நரவாகனன் ஈண்டு வருக! என்று கருதினன் என்க. (52)
நரவாகனன் வருதலும் உதயணன் அவனுக்குக்
கூறலும்
355. அவனும்வந்து தந்தையை
யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா
ளென்னமன்னன் செப்பினன்
தவனிதை யாளநான்
றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய
முற்றதெதற் கென்றனன்.
|