(இ - ள்.) அந் நரவாகனனும் தந்தை
நினைத்தாங்கு வித்தியா தரருலகினின்றுமிழிந்து
கோசம்பி நகரெய்தி தந்தையின் திருவடிகளை
வணங்கினன். அவன் வரவு கண்ட மன்னனும் மகிழ்ந்து “அருமை
மைந்தனே! இந்நிலவுலக ஆட்சியும் நின்னுடையதாக
நீயே இதனை ஆள்வாயாக” என்று கூறினன். அதுகேட்ட
நரவாகனன் “தந்தையே! தவத்தால் பெறக்கிடந்த
கேவலஞான நன் மடந்தையை மணந்தின்புறக் கருதி
அத்தவத்தை மேற்கோடற்குத் துறந்து போவேன்
ஆகலின் ஒப்பற்ற இந்நிலவுலக ஆட்சி எனக்கு
எதற்காம்?” என்றும் கூறினன் என்க. (53)
கோமகனுக்கு முடி சூட்டுதல்
356. வத்தவன் னிறைவனாக
மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை
வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென்
றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச்
செல்வனோக்கிக் கூறுவான்.
(இ - ள்.) மைந்தன் கூறக்கேட்ட அவ்
வத்தவ மன்னன் இளங்கோவாக முன்னரே
நிலைபெற்றுள்ள கோமுகனுக்கே வெற்றி யுடைய அழகிய
கோமுடியை வீறு பெறச் சூட்டி, “மைந்த! நீ நம்
முன்னோர் போன்று இவ்வுலகினை ஆள்வாயாக!” என்று
பணித்து அவனுக்கின்றியமையா அரசியலறம்
பலவற்றையும் அறிவுறுத்திய பின்னர் ஓவியமே
போன்ற உருவ மாண்புடைய தன் மனைவிமாரை நோக்கி
அவ்வுதயண வேந்தன் கூறுவான் என்க. (54)
உதயணன் மனைவிமார்க்குக் கூறுதலும்,
அவர் கூறுதலும்
357. தேவியீர்நீர் வேண்டியதென்
திருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன
மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்கும்
புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவமுந்
தாங்குதுமென் றிட்டனர்.
|