பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்157


(இ - ள்.) முனிவரை வணங்கிய உதயண வேந்தன்றானும் தனது நாத்தழும்பும்படி நயமிக்க இனிய குரலாலே அம் முனிவனுக்கு வாழ்த்துப் பாடல் பல புனைந்து பண்ணோடு பாடி வாழ்த்திய பின்னர் அம்முனிவர் பெருமான் தேவரும் புகழும் நல்லறங்களை அறிவுறுத்த இனிமையோடு கேட்டனன். பின்னரும் பெரியீா!் புகழ்தற் கரிய நல்ல தவத்தையும் அடியேங்கட்கு அறிவித்தருளுக! என்று வேண்டினன் என்க. (57)

உதயணன் முதலியோர் தவக்கோலங் கோடல்

360. காலமிது காட்சிதலை

கண்டுணர்த்தக் கைக்கொண்டு

ஞாலநிகழ் ஞானமு

நன்குமிகவே யுணர்த்திச்

சீலமாதி யாயொழுக்கஞ்

சீருட னளித்தபின்

கோலமான குஞ்சிமுதல்

வாங்கித்தவங் கொண்டனர்.

(இ - ள்.) அம்முனிவர் பெருமானும் இவர்க்குத் துறவற முணர்த்தற் குரிய காலமும் இஃதேயாம் என்று துணிந்து, உலகத்தைப்பற்றி யுண்டாகும் நன்ஞானமும் நற்காட்சியும் நல்லொழுக்க முதலிய ஒழுக்கத்தையும் சிறப்புறவே நன்கு அவர்கட்குணர்த்திய பின்னர் அம் மன்னன் முதலியோர் அழகான தம் குஞ்சியும் கூந்தலுமாகிய தலைமயிரைப் பறித்து நீக்கித் தவக்கோலந் தாங்கினர் என்க. (58)

உதயணன் முதலியோர் தவநிலை

361. அறுவகைய காயங்களை

யருண்மிக்குற் றோம்பியும்

பொறிகளை மனத்தடக்கிப்

புண்ணியமா நோன்புகள்

அறிகுறி யநசன

மாற்றுதற் கரிதென

மறுவறு தியானமு

மதியகந் தெளிந்தவே.