மூன்று வகை அடக்கங்களும் உடையவராய்,
உணவு எண்ணம் பெண்ணெண்ணம் அச்சவெண்ணம்
கைப்பற்றுமெண்ணம் என்னும் நான்கு வகை எண்ணங்களை
மாற்றி ஒப்பற்ற ஐம்புலன்களையும் அடக்கி
நிலைபெற்றபடியே அறுவகை ஆவச்சமுமாகிய
செவிலிமாரையும் எழுவகைக் குணங்கள் என்னும்
நண்பரையும் தந்தவமாகிய குழந்தை வளர்தற்கு
நியமித்து வைத்தனர் என்க. (61)
இதுவுமது
364. சுத்திமிக எட்டினோடுஞ்
சூழ்ந்தயோகு ஒன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப்
பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க்
கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழும்
ஒருங்குடன் பயின்றனர்.
(இ - ள்.) தூய்மை மிகும்படி
கேசேலுஞ்சனம் முதலிய எண்வகைக் குணங்களோடு ஒன்பது
வகையான யோகங்களையும் உடையராய்
வெப்பந்தட்பம் முதலியவற்றைத் தாங்கலாகிய
பத்துவகைப் புறப்பரிசைகளையும் உடையராய்
வினைவரும் வாயிலை அடைத்துப் பயின்ற பதினொருவகை
யுறுப்புக்களோடும் பசி நீர்வேட்கை
முதலியவற்றைப் பொறுத்தலாகிய பன்னிரண்டு
அகப்பரிசைகளையும் உடையவராய்ச் சிறந்த
பதின்மூன்றுவகைக் கிரியைகளையும் ஒத்த பதினான்கு
பங்கங்களையும் ஒருசேரப் பயின்றனர் என்க.
இவற்றிற் சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை
அட்டபதார்த்தசார முதலியவற்றால் விளக்கமாக
அறிந்து கொள்க; ஈண்டுரைப்பிற் பெருகும். (62)
உதயணன் கேவலஞான மெய்துதல்
365. உதயண முனிவனு
மோங்குமா வரைதனில்
இதயமினி தாகவே
யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தி
னிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப்
பரமசுகத் தினிதிருந்தனன்
|