பக்கம் எண் :

26உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


நூலாசிரியரின் இரங்கன் மொழிகள்

58. நங்கை மார்குழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகஞ் சூட்டுங்கை.

(இ - ள்.) ஐயகோ! இந்தச் செவ்வியில் அப்பகைமறவர் பலர் நெருங்கிவந்து, சிறந்த மகளிருடைய கூந்தலிலே அன்றலர்ந்த புதிய மலர்களைச் சூட்டுகின்ற அருமைக் கைகளை - அம்மகளிர் நெற்றியிலே திங்கள் மண்டிலம் போலத்திலகமிடுகின்ற கைகளை - அம்மகளிருடைய பருத்த கொங்கைகளிலே குங்குமச் சாந்துபூசி மகிழுகின்ற இன்பக்கைகளை - அம்மகளிருடைய செந்தாமரை மலர்போன்ற திருவடிகட்குப் பாடகம் என்னும் அணிகலனை அணிந்து மகிழும் அன்புக்கைகளை; என்க. (54)

59. கீத வீணைசெங் கெந்த மளையுங்கை
ஈதன் மேவி யிரவலர்க் காற்றுங்கை
ஏத மில்குணத் தென்முடி மன்னன்கை
போத வெண்டுகி லாற்புறத் தார்த்தனர்.

(இ - ள்.) இன்னிசைக் கருவியாகிய யாழ்நரம்புகளையும் செவ்விய நறுமணச் சாந்தத்தையும் துழாவுகின்ற கைகளை, ஈதல் என்னும் அறத்தை மிகவும் விரும்பி இரவலர்கள் விரும்பியவற்றை யெல்லாம் அருளுடன் வழங்கும் வள்ளன்மையுடைய கைகளை, குற்றமற்ற குணங்களையுடைய ஒளிமுடி வேந்தனாகிய அவ்வுதயணமன்னனுடைய சிறந்த கைகளை மிகவும் வெள்ளிய துகில்கொண்டு புறத்தே கட்டினர் என்க. கெந்தம் - மணப்பொருள். எல்+முடி. (55)

உதயணன் ஓலையெழுதி வயந்தகன்பாற் சேர்த்தல்

60. சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினா னன்புடை யூகிக்கே
இலங்க வோலை யெழுதி வயந்தகன்
நலங்கொள் கையி னவின்று கொடுத்தனன்.

(இ - ள்.) சிலந்தியினது நூலாலே கட்டுண்டு நிற்குமொரு நல்ல அரிமானேறு போன்ற மாலையணிந்த வேலையுடைய அவ்வுதயணமன்னன் தன்பாற் பேரன்புடைய யூகிக்குமட்டுமே விளங்கும்படி குறிப்பு மொழிகளாலே ஒரு திருமந்திரவோலை வரைந்து அதனை யூகியின்பாற் கொடுக்கும்படி குறிப்பாற் கூறி வயந்தகனுடைய நன்மையுடைய கையிலே கொடுத்து விட்டனன் என்க. (56)