பக்கம் எண் :

28உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


னொரு பேரழகுடைய மணமகன் ஈண்டுவந்து துவளுமிடையையுடைய இவளுடைய இளமுலைப்போகமும் நுகர்ந்து தன்னுடன் அழைத்துச் செல்வான் என்று அக்கனவின் பயன்கூறக் கேட்டு அப்பிரச்சோதன மன்னனும் பெரிதுமகிழ்ந்திருக்கும் பொழுது முற்கூறப்பட்ட உதயணகுமரனும் தேரிலே உஞ்சை நகரத்திற்கு வந்து சேர்ந்தான். (59)

உதயணன் சிறைக் கோட்டம் புகுதலும்
வயந்தகன் யூகியைக் காண்டலும்

64. மன்ன னைமி கவும்நொந்து மாந கரி ரங்கவும்
துன்னி வெஞ்சி றைமனையிற் றொல்வி னைது ரப்பவும்
இன்ன நற் படியிருப்ப வியல்வ யந்த கனுந்தான்
சென்று யூகி தன்னிடைத் திருமு கத்தைக் காட்டினான்.

(இ - ள்.) உதயணனைச் சிறையாகப் பற்றிக் கொணரக்கண்ட அம்மாநகரத்து மாந்தரெல்லாம் பிரச்சோதன மன்னன் பெரிதும் மதிகெட்டான் எனப் பழித்து உதயணன் பொருட்டு வருந்தா நிற்பவும், உதயணனது பழவினை வந்து அவனை வெவ்விய சிறைக் கோட்டத்துள்ளே புகுத்தாநிற்பவும் இவ்வாறு இருப்ப நல்லியல் அமைச்சனாகிய வயந்தகன் உதயணன் கூறியவாறு விரைந்து சென்று யூகியந்தணன்பால் உதயணன் திருமந்திர வோலையைக் கொடுத்தனன் என்க. (60)

ஓலைகண்டு யூகி துன்புறுதல்

65. அண்ணல் கோயி லெங்கணு

மரற்றி னும்பு லம்பினும்

கண்ணி னீர ருவிகள்

கால லைத்தொ ழுகவும்

அண்ண லோலை வந்தசெய்தி

மான யூகி கேட்டுடன்

புண்ணில் வேலெ றிந்தெனப்

பொற்ப ழிந்து வீழ்ந்தனன்.

(இ - ள்.) உதயணகுமரன் வரைந்துவிடுத்த திருமந்திரவோலைச் செய்தி கேட்டவுடன் யூகியின் அரண்மனையில் எங்கெங்கும் அழுதலாலும் புலம்புதலாலும் கண்ணீர் அருவிபோல வீழ்ந்து மாந்தருடைய கால்களில் வழிந்து ஒழுகாநிற்பவும் அந்த யூகி பழம் புண்ணில் வேல் செருகினாற் போன்று வருந்திப் பொலிவிழந்து நிலத்திற் சாய்ந்தனன் என்க. (61)