கறிகுவனாதலின் பிறர் மயங்குதற்குக்
காரணமான அக்குறிப்பு மொழிகளைப் பேசிக்கொண்டு
நிலைபெற்றதொரு மாறுவேடம் பூண்டுகொண்டு உதயணனைக்
காணும்பொருட்டு நல்ல அந்நகர வீதியினடுவே வந்தான்
என்க. (69)
யூகியின் மாறுவேடத்தின் இயல்பு
74. இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள்செய மாலை வகுத்துடன் சுற்றி
உருநிறச் சுண்ண முடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி.
(இ - ள்.) இருள்போன்று கறுத்த தன்
தலைமயிரை விரித்து விட்டு அதன்மேல் கண்டோர்
மயங்குமாறு மலர்மாலை பலவற்றைப் பலவகையாகச்
சுற்றிக்கொண்டு, அழகிய நிறமுடைய நறுமணப் பொடியை
உடனிரம்பப் பூசியும் பொருளில் நன்மைமிக்க
சுட்டியென்னும் அணிகலன் நெற்றியிற்
பொருந்தும்படி வைத்தும், என்க. உரு - அழகு. (70)
இதுவுமது
75. செம்பொற் பட்டஞ் சேர்த்தி நுதலில்
அம்பொற் சாந்த மணிந்த மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தின னரையில்
அம்படக்கீறி யணிந்த வுடையான்.
(இ - ள்.) நெற்றியி்ன்கண் செம்பொன்னாலியன்ற
பட்டத்தையுமணிந்து அழகிய பொன்னிறச் சாந்தத்தை
அணிந்த மார்பையுடையனாய், செம்பொன்னிழையாலியன்ற
கச்சையைக் கட்டியவனாய் இடையின்கண் அழகாகக்
கிழித்துடுத்த ஆடையையுடைய வனாய் என்க. (71)
இதுவுமது
76. கோதையுத் தரியங் கொண்ட கோலத்தன்
காதிற் குழையினன் காலிற் சதங்கையன்
ஊதுங் குழலின னுலரிய வுடுக்கையன்
போதச் சிரசிற் பொருநீர்க் கலசன்
(இ - ள்.) மலர் மாலைகளானும் மேலாடையானும்
ஒப்பனை செய்து கொண்டவனாய்ச் செவியிற் குண்டலமணிந்தவனாய்க்
காலிற் சதங்கை கட்டியவனாய் வேய்ங்குழலிசைப்போனாய்
உலர்ந்ததோல் போர்த்த உடுக்கையையுடையவனாய்த்
தலையின்மேல் மிகுதியாகப் பொருந்திய நீர்க் குடத்தையுடையவனாய்
என்க. போதம் அறிவுமாம். (72)
|