பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்33


இதுவுமது

77. கொடியணி மூதூர்க் கோலநல் வீதி
நடுவட் டோன்றி நாடக மாடிப்
படுமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி
இடியென முழங்கி யினிதினின் வந்தான்.

(இ - ள்.) இவ்வண்ணமாக வேடம் புனைந்து கொண்டு கொடிகளாலே அழகு செய்யப்பட்ட பழைதாகிய அவ்வுஞ்சை நகரத்தின் அழகிய நல்ல தெருவின் நடுவே தோன்றி, தோன்றுகின்ற இசைக்கரண விலக்கணங்களையும் தன்னியல்பாலே கடந்து இடிபோல அத்துடியை முழக்கிக் கொண்டு இனிதாக வந்தனன் என்க. (73)

யூகி கூற்று

78. இந்திர லோகம்விட் டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியா னன்பினின் வந்தேன்
இந்திர னெனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.

(இ - ள்.) அங்ஙனம் வந்த யூகி ஆங்குக் குழுமிய மாந்தர் கேட்கும்படி “மாந்தர்காள் கேளுங்கள்! வானவர் நாட்டிலிருந்து அவ்வானவர் கோமானாகிய இந்திரன் இந்நகரத்திற்கு வந்தனன்; யான் அவ்விந்திரன்பாற் கொண்டிருந்த அன்புடைமையாலே வான் வழியே இங்கு வந்தேன். அந்த இந்திரன் எனக்கு அரசனாவான;் இங்குள்ள படைகளுக்கும் நுங்களுக்குங்கூட அவனே அரசன் ஆவன் காண்!” என்றான் என்க. (74)

இதுவுமது

79. புற்றினி லுறையும் பொறிவரி யைந்தலைப்
பற்றரு நாகம் பற்றிவந் தினிதா
உற்றவிந் நகரத் துட்சிறை வைத்தார்
அற்றதை யெங்கு மறியக் காட்டினார்.

(இ - ள்.) “மாந்தர்களே! நும்மனோர் தனக்குரிய புற்றில் வாளாவிருந்த புள்ளிகளையும் வரிகளையும் உடைய ஐந்து தலைகளையுடைய பற்றுதற் கரியதொரு நச்சுப் பாம்பினைப் பிடித்துவந்து இதுகாறும் இனிதே வாழ்ந்த இந்நகரத்திற் சிறைக்கோட்டத்தே வைத்தனர். அப்பாம்பினை இனிதாயதொரு காட்சியாக எவ்விடத்தும் எல்லோரும் அறியக் காட்டவுங் காட்டினர்; என்றான் என்க. (75)

உத. - 3