இதுவுமது
80. மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ்சிறைப் பள்ளி யருகினிற் சேர்ந்தான்.
(இ - ள்.) இவ்வாறு யூகி கேட்போர்
பொருளறியாது மயங்குதற் குரியனவும் ஒருவாறு
குறிப்பாற் பொருள் விளங்குதற்குரியனவுமாகிய
மொழிகள் எண்ணிறந்தவற்றைப் பலகாலும் சொல்லித்
தன்னைச் சூழ்ந்து குழுமுகின்ற அந்த மாந்தர் தன்னைத்
திறம்பட விடாது சூழ்ந்துவரும்படி பெரிய பெரிய
தெருக்கள் எல்லாம் பிற்படக் கடந்துபோய் உதயணனிருந்த
தப்புதற்கரிய சிறைக் கோட்டத்தின் பக்கலிலே
சேர்ந்தான் என்க. (76)
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
யூகி சூழ்வினையொன்றால் தன்வரவினை உதயணனுக்குணர்த்திப்
போதல்
81. கிளைத்தலை யிருவர் கற்ற
கிளர்நரப் பிசையுங் கீதம்
தளைச்சிறை மன்னன் கேட்பத்
தான்மகிழ் குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு
யூகியா மென மகிழ்ந்து
களைந்தனன் கவலை யெல்லாங்
காவலற் குணர்த்திப் போந்தான்.
(இ - ள்.) சிறைக் கோட்டத்தயலே சென்ற
யூகி தானும் உதயணனும் இளமையின் தம் சுற்றத்தாரிடையே
பயின்றதும் கிளர்ச்சியுடைய யாழிற்கு மிகவும்
பொருந்துவது மானதோரிசையின் விலங்கு பூட்டி வைத்தற்கிடனான
அச்சிறைக் கோட்டத்துறை கின்ற மன்னனாகிய
உதயணன் கேட்குமாற்றால் தான் பெரிதும் சுவைத்து
மகிழ்கின்ற வேய்ங்குழலின்கண் வைத்து ஊதா நிற்ப;
தன் நெஞ்சின்கண் ஊடுருவி மகிழ்விக்கின்ற
அவ்விசையைக் கேட்குமளவிலே உதயணகுமரனும் இவ்விசை
யூதுவோன் யூகியே என்று தெளிந்து மகிழ்ந்து தன்
கவலையெல்லாம் விடுத்திருந்தனன். இவ்வாறு யூகி
உதயணனுக்குத் தன் வரவினை உணர்த்திச் சென்றான்
என்க. கிளைத்தலை - சுற்றத்தார் சூழல். (77)
|