பிரச்சோதனன் மறவர் யூகியை அணுகி ஆராய்ந்துபோதல்
82. பலகொடி வாயிற் செல்லப்
பார்மன்னன் சேனை வந்து
நலமுறு வடிவு நோக்க
நாகத்தின் கோடு பாய்ந்த
கலனணி மார்வ டுவ்வைக்
கஞ்சுகத் துகிலின் மூடத்
தலைமுத லடியீ றாகத்
தரத்தினாற் கண்டு போந்தார்.
(இ - ள்.) இந்நிகழ்ச்சியினை ஒற்றராலுணர்ந்த
பிரச்சோதனனுடைய படைமறவர் அவ்வியூகி பலவேறு
கொடி நுடங்குகின்ற மாடவாயிலிடத்தே செல்லும்பொழுது
வந்து அவனுடைய அழகிய வடிவத்தைக் கூர்ந்து நோக்காநிற்ப,
அதுகண்ட யூகியும் (தன் சிறப்படையாளமாய்த்) தன்
மார்பின்கண் பண்டு போர்க்களத்தே களிற்றியானைக்
கோடுழுதமையாலுண்டான வடுவைக் குப்பாயத்தாலே (சட்டையாலே)
மூடியிருப்ப எஞ்சிய பகுதிகளைத் தலைமுதல் அடியீறாக
நன்றாக நோக்கிச் சென்றனர் என்க. யூகிக்கு
மார்பில் வடுவுண்டென்பதனை “வலிந்துமேற் சென்ற
கலிங்கத் தரசன், குஞ்சர மருப்பிற் குறியிடப்பட்டுச்
செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து, மார்பினது
வனப்பும்,” என (பெருங்கதை, 1, 25:
20-25) முதனூலும் கூறுதலறிக. (78)
யூகி யானைக்கு வெறியூட்டுதல்
83. பித்தனற் பேய னென்று
பெருமகற் குரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனை மற்றும்
வெஞ்சிறை காக்க வென்றான்
மற்றினி யூகி போந்து
மலிகுடி பாக்கஞ் சேர்ந்தே
அற்றைநா ளிரவில் யானை
யனல்கதம் படுக்க லுற்றான்.
(இ - ள்.) யூகியைக் கூர்ந்து நோக்கிச்
சென்ற மறவர் அரசனை அணுகி இங்ஙனம் வந்த புதுவோன்
யாரோ ஒரு பித்தனாதல் வேண்டும், இன்றேற் பேயேறியவன்
ஆதல் வேண்டும் என்று தம்மரசனுக்கு அறிவித்தனராக;
அப்பால் யூகி தன் மறவர் உறையும் குடிமக்கள் மிக்க
மதிற்பாக்கத்தை அடைந்து அற்றை நாளிரவிலேயே பிரச்சோதனன்
பட்டத்து யானையைப் புகையூட்டி
|