பின்னரும் மானக்குணமிக்க
நல்லோனாகிய அந்த யூகி அக்களிற்றினது செவியிலே
மந்திரமோதியவளவிலே அம்மதக்களிறு தன்னைத்
தறியோடு பிணித்திருந்த அறுத்தற்கரிய
சங்கிலியை அறுத்துத் துகளாக்கியது என்க. (81)
யானை பாகரைக் கொல்லுதல்
86. நீங்கிட மிதுவென் றெண்ணி
நிலைமதி லேறிப் போகத்
தூங்கிரு டன்னி லானை
சுழன் றலைந் தோடப் பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப்
படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையா
லவரைக்கொன் றிட்டதன்றே.
(இ - ள்.) யூகி களிறு
காற்பிணியுதறினமை கண்டு யாம் இனி
இவ்விடத்தினின்றும் நீங்குதற்குரிய
செவ்வியிதுவே என்று கருதி நிலைத்த மதிலின்கண்
ஏறிப் புறமே போக, அக்களிறு உலகெலாந் துயிலுகின்ற
அவ்விருட்பொழுதிலே விரைந்து சுழன்று சுழன்று
யாண்டும் ஓட, அதுகண்ட யானைவலவர் பக்கங்களிலே
சென்று மறித்தலாலே அக்களிறு பின்னரும் வெகுண்டு
முகிலிற்றோன்றும் இடிபோல முழங்கி அவர்தம்
கருவியைப் பிடுங்கித் தன் கையால் அவர்களை
அறைந்து கொன்றது என்க. (82)
பிரச்சோதனன் களிற்றின்
வெறிச்செயல் காண்டல்
87. வேழமும் மதங்கொண் டோட
வேந்தன்கேட் டினிதெ ழுந்து
வேழநன் வேட்டங் காண
வெம்முலை மாத ரோடும்
ஆழிநல் லிறைவன் றானு
மணிமிகு மாட மேறிச்
சூழநன் மாதர் நிற்பத்
துளக்கின்றி நோக்கி னானே.
(இ - ள்.) நளகிரி வெறிகொண்டு
மனம்போன வழி யாண்டும் ஓடுகின்ற செய்தியைக்
கேள்வியுற்ற ஆழியையுடைய பிரச்சோதன மன்னன்
இனிதே எழுந்து அக்களிற்றினது நல்ல வேட்டத்
தொழிலைக் காண்டற்கு வெவ்விய முலைகளையுடைய
மனைவிமாரொடு அழகுமிக்க மேனிலை மாடத்திலேறித்
தன்னைச் சூழ்ந்து உரிமை மகளிர் நிற்ப
அச்சமின்றி நோக்கினான் என்க. வேட்டம் -
கொலைத் தொழில்.
(83)
|