நளகிரியின் தீச்செயல்கள்
88. கூடமா ளிகைக ளெல்லாங்
கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலு மற்று
மறித்தஃதி டித்துச் செல்ல
ஆடவர் கூடி யோடி
யயில்குந்தந் தண்ட மேந்தி
நாடி நற்கையாற் றட்டி
நாற்றிசை சூழ்ந்து நின்றார்.
(இ - ள்.) அப்பொழுது அந்த யானை
கூடங்களையும் மாட மாளிகைகளையும் இன்னோரன்ன
பிறவற்றையுமெல்லாம் தனது மருப்பினாற் குத்திச்
சிதைத்து மேலும் மாடங்களையும், மதிலையும்,
மீண்டும் அது இடித்து வீழ்த்திப் போகாநிற்ப,
ஆண்டுள்ள மறவரெல்லாம் ஒருங்கு கூடி யானையின்பால்
ஓடி, வேலும் குந்தமும் தண்டும் பிறவுமாகிய
படைக்கலன்களை ஏந்தி அக்களிற்றின்
கொடுஞ்செயலைக் கண்டஞ்சி வறிய கைகளைத் தட்டி
நான்கு திசைகளிலுஞ் சூழ்ந்து நின்றனர் என்க. (84)
இதுவுமது
89. கூற்றுரு வெய்தி யோடிக்
கோட்டிடைக் குடர்க ளாடக்
காற்றென முழக்கி வேழங்
கண்டமாந் தரைதத்ன் கையால்
நாற்பத்தெண் பேரைக் கொன்று
நடுவுறப் பிளந்திட் டோடி
மாற்றருங் கோட்டை வாயின்
மதிற்புறம் போந்த தன்றே.
(இ - ள்.) மக்களின் ஆரவாரங்கேட்டு
அக்களிறு கூற்றுவனே உருவங்கொண்டு வந்தாற்போன்று
ஓடிச் சென்று அம்மாந்தர்களிற் பலரைக்
குத்தித்தன் கோட்டின்கண் அவர்கள் குடல்
கிடந்தசையும் படி சூறைக் காற்றென ஆரவாரித்துத்
தன் கண்ணிலே கண்ட கண்ட மாந்தரைக் கையாற்
புடைத்து நாற்பத்தெண்மரைக் கொன்று அம்மக்கட்
கூட்டத்தை ஊடறுத் தோடிப் பகைவரால் மாற்றுதற்
கியலாத அவ்வரண்மனையினது மாடவாயிலின்
மதிற்புறத்தே வந்தது என்க. (85)
|