பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்39


இதுவுமது

90. அறுநூற்றின் மீதி லைம்ப தானநற் சேரி தானும்
உறுநூற்றி லேழை மாற வுள்ளநாற் பாடி யோடும்
நறுமலர்க் கந்தம் வீசு நன்குள காவு மற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநக ரழித்த தம்மா.

(இ - ள்.) மதிற்புறத்தே வந்த களிறு ஆண்டுள்ள அறுநூற்றைம்பது நல்ல சேரிகளையும் எழுநூற்று நான்கு பாடிகளையும் பிறவற்றையும் மதவெறி பிடித்த அந்தக் களிற்றியானை தன் கோட்டாலேயே குத்தி அழித்தொழித்தது என்க. (86)

உஞ்சை மாந்தர் அலமரல்

91. பாடுநன் மகளி ரெல்லாம் பாட்டொழிந் தரற்றி யோட
ஆடுநன் மாதர் தாமு மாடல்விட் டலந்து செல்லக்
கூடுநன் மங்கை மைந்தர் குலைந்தவ ரேகிச்செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோ டாங்கே.

(இ - ள்.) அப்பொழுது அம்மாநகரத்தே பண் பாடிய அழகிய மகளிரெல்லாம் பாடுதல் விடுத்து அழுதுகொண் டோடவும், கூத்தாடிய மகளிர்களும் கூத்தொழிந்து மனம் நொந்து போகவும், தம்முட் காதலாற் புணர்ச்சியுற்ற அழகிய மகளிரும் ஆடவரும் அப்புணர்ச்சி குலைந்தவராய்ச் சென்று செம்பொன்னாலியன்ற மேனிலை மாடங்களிலேறி ஆங்கு நிற்கின்ற பலரோடுங் கூடி நிற்பாராயினர் என்க. (87)

அமைச்சர் அக்களிற்றை யடக்குதல் உதயணன்
ஒருவனுக்கே முடியும் எனல்

92. மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத் தாரும்
வற்றிநல் வேந்த னோடு வினவினா ரமைச்ச ரெண்ணி
இத்தின நகரம் பட்ட விடரது விலக்க னல்ல
வத்தவன் கைய தென்ன வகுத்துரை கேட்ட மன்னன்.

(இ - ள்.) மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பட்டுக் கலங்கிய பாற்கடல் போன்று நளகிரியாலே துன்புறுத்தப்பட்ட நகரமாந்தரனைவரும் வெற்றியுடைய தம் செங்கோன் மன்னனை யடைந்து குறை வேண்டினராக மன்னவனும் அமைச்சரோடு சூழ்ந்து வினவிய வழி அவர் இற்றை நாள் நமக்குத் தோன்றிய இவ்விடையூற்றை விலக்கி நம்மைப் பாதுகாத்தல் நன்மையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனுக்கே முடிவதாம், ஆதலால் நம் வாழ்க்கை அவன் பாலது என்று விளக்கிக் கூற அது கேட்ட மன்னவன் என்க. (88)