மன்னன் மறுத்துக் கூறுதல்
93. போரினி னிற்க லாற்றாம்
பொய்யினிற் றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச்
சிறையினில் வைத்த தன்றிப்
பேரிடிக் கரிமுன் விட்டாற்
பெரும்பழி யாகு மென்று
தாருடை வேந்தன் சொல்லத்
தரத்தினா லமைச்சர் சொல்வார்.
(இ - ள்.) அதுகேட்ட மன்னன்
பழிக்கஞ்சியவனாய் அமைச்சியலீர்! யாமோ
அம்மன்னன் மகனோடு போர் செய்தற்கு
ஆற்றலிலேமாய் வஞ்சித்துச் சிறைபிடித்துக்
கொணர்ந்து அவனுடைய சீரையுஞ் சிறப்பையும்
பறித்துக் கொண்டதொரு பழியும் கிடக்க,
பின்னரும் பேரிடிபோலும் கொடுமையுடைய நளகிரிக்
கூற்றத்தின் முன்புங் கொடு போய் விட்டால் அது
பெரியதொரு பழியாகுமன்றோ என்று வெற்றி
மாலையுடைய அப் பிரச்சோதன மன்னன் மறுத்துக் கூற
அவ்வமைச்சர்கள் தந்தகுதிக்கியையக் கூறுவார்
என்க. (89)
அமைச்சர்கள் அதுபழியன்று
புகழேயாமெனல்
94. இந்திர னானை தானு
மிவன்கையா ழிசைக்கு மீறா
திந்திரன் வேழ முங்கேட்
டேழடி செல்லு மற்றிக்
கந்திறு கைம்மா விக்கோன்
கைவீணை கடவா தென்ன
மந்திரத் தவர்சொற் கேட்டு
மன்னனப் படிச்செய் கின்றான்.
(இ - ள்.) பெருமானே! இவ்வுதயணன்
கையதாகிய கோடவதி என்னும் பேரியாழினது இன்னிசை
கேட்பின் இந்திரனுடைய ஐராவதமேயாயினும்
அடங்குவதன்றி மீறிச் செல்லாது. அவ்விந்திரன்
களிறும் அவனை வழிபட்டு அவன்பின் ஏழடி செல்லுமே
இங்ஙனமாகலின் தறிமுறித்த நமது களிற்றியானை
இம்மன்னனுடைய யாழினது இசைக்கு அடங்குவதன்றிக்
கடந்து போகாது; ஆகவே
அது நமக்கும் அவனுக்கும் புகழேயன்றிப் பழியாகாது
என்று ஆராய்ந்து அவ்வமைச்சர் கூறிய மொழி கேட்டு
மன்னனும் அவ்வாறே செய்யத் துணிந்தனன் என்க. (90)
|