பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்41


அமைச்சன் பிரச்சோதனன் சீவகன் என்பான்
உதயணனைக் கண்டு கூறல்

95. சீவகன் வத்த வற்குச்

செவ்விதிற் செப்பு கின்றான்

தேவ விந் நகரிடுக் கண்

டீர்க்கைநின் கடன தாகும்

போவதுன் றேசத் தென்றல்

புரவலன் கடன தாகும்

பூவல னுரைத்தா னென்னப்

புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.

(இ - ள்.) பிரச்சோதனன் வேண்டுகோளுடன் சென்ற சீவகன் என்பான் சிறைக்கோட்டம் புக்கு உதயணனுக்கு நன்கு கூறுவான். ?அரசர்க்கரசே இவ்வுஞ்சைமாநகர் மாந்தர்க்கு இற்றை நாள் களிறு செய்யும் துன்பம் தீர்ப்பது உன் கடமையாமென்றும், இதற்குக் கைம்மாறாக நீ சிறை வீடுபெற்று நின்னாடு சேர்தலைச் செய்வது எம் மன்னன் கடமையாம் என்றும் எம் மன்னன் உரைத்தனன்? என்று அவ்வுதயணனைப் புகழ்ந்து கூறி அவனைச் சிறைவீடுஞ் செய்தனன் என்க. (91)

96. உருவுள சிவிகை யேறி

யுயர்மன்னன் மனைபு குந்து

திருமயி ரெண்ணெ யிட்டுத்

திறத்தினன் னீரு மாடி

மருவிநன் பட்டு டுத்து

மணிக்கல னினிது தாங்கித்

தெருவிடைத் திகழப் புக்கான்

றிருநகர் மகிழ் வன்றே.

(இ - ள்.) சிறைவீடுபெற்ற உதயணகுமரன் அந்நகர் மாந்தர் மகிழும்படி அழகிய சிவிகையிலேறி உயரிய பண்புடைய பிரச்சோதன மன்னன் அரண்மனை புகுந்து அழகிய மயிரின்கண் எண்ணெய் நீவித் திறம்பட நல்ல நீரிலே ஆடிச் சென்று பட்டாடையுடுத்து மணியணிகலன் காண்டற்கினிதாக அணிந்து கொண்டு அரச வீதியில் அழகுறச் சென்றனன் என்க. (92)