பக்கம் எண் :

42உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


உதயணன் யாழிசைத்தலும் களிறு அடங்குதலும்

97. பருந்துபின் றொடர யானை

பறவைகண் மற்றுஞ் சூழப்

பெருந்தெரு நடுவுட் டோன்றப்

பீடுடைக் குமரன் றானும்

திருவலித் தடக்கை வீணை

சீருடன் பாட லோடும்

மருவலிக் களிறுங் கேட்டு

வந்தடி பணிந்த தம்மா.

(இ - ள்.) அங்ஙனம் சென்ற உதயணகுமரன் ஆங்கொரு பெரிய தெருவின் நடுவே அக்களிற்றியானை தன்னைப் பருந்துகள் பின் தொடர்ந்து பறப்பவும், பிற பறவைகளும் சூழ நிற்பவும் எதிர் வந்து தோன்ற, அதனைக் கண்ட பெருமையுடைய அவ்வத்தவ வேந்தனும் அழகும் வலிமையுமுடைய தன் பெரிய கையின்கண்ணதாகிய யாழினைப் பண்ணுறுத்திச் சீரோடு பண் எழுப்பிப் பாடியவுடனே ஆங்கு வந்த வலிமையுடைய அக்களிறு தானும் அவ்வின்னிசை கேட்டு மகிழ்ந்து அவன் திருமுன்னர் வந்து அடிகளில் முழந்தாட் படியிட்டு வணங்கிற்று என்க. (93)

உதயணகுமரன் நளகிரியின் மேலேறுதல்

98. பிரிந்தநற் புதல்வர் வந்து

பெற்றதந் தந்தை பாதம்

பரிந்தநற் காத லாலே

பணிந்திடு மாறு போலே

இருந்துதற் பணிந்த யானை

யெழின்மருப் படிவைத் தேறிப்

பெருந்தகை யேவிக் கோட்டு

பெருங்கையாற் றோட்டி கொண்டான்.

(இ - ள்.) பிரிந்து போன மைந்தர் மீண்டு வந்து தம்மைப் பெற்ற தந்தையின் அடிகளிலே மிக்க அன்புடன் வீழ்ந்து வணங்குவது போலத் தன்னைப் பணிந்த அந்த நளகிரியின் குறிப்பறிந்து அதன் மருப்பிலே அடியை வைத்து ஏறிப் பிடரின்கண் வீற்றிருந்து அந்தப் பெருந்தகையாகிய உதயணன் அதனையே ஏவி அதுதன் வளைந்த கையினாலேயே எடுத்துக் கொடுப்பத் தோட்டியையும் தன் கையிற் கொண்டனன் என்க. ஏறியிருந்து என மாறுக. (94)