உதயணன் அக்களிறூர்ந்து வருதலும்
பிரச்சோதனன் மகிழ்தலும்
99. வைத்தநன் மணியும் யாழும்
வரிக்கயி றதுவு நீட்ட
வெற்றிநல் வேந்தன் வாங்கி
வீக்கிமிக் கார்த்துக் கொண்டே
உற்றநல் வீதி தோறு
மூர்ந்துநற் சாரி வட்டம்
பற்றிநன் கோட்டக் கண்டு
பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.
(இ - ள்.) பின்னர் அக்களிறு
ஏவாமலும் ஆங்கு உதயணன் நிலத்திலே வைத்துள்ள
நல்ல மணியையும் கோடவதியையும் புரோசைக்
கயிற்றையும் தானே எடுத்துக் கொடுப்ப
வெற்றிமிக்க நல்ல வேந்தனாகிய அவ்வுதயணன்
அவற்றையுங் கைக்கொண்டு கயிற்றை அதன் கழுத்திலே
வரிந்து மிகவும் இறுக்கிக் கட்டிப் பின்னர்
அந்நகரிற் பொருந்திய சிறப்புடைய
வீதிகளிலெல்லாம் சாரி வட்டம் என்னும் களிற்று
நடை வகைகளாலே நன்றாக ஊர்ந்து வருதலை
அப்பிரச்சோதன மன்னன் கண்டு பெரிதும்
மகிழ்ச்சியுற்றான் என்க. சாரி, வட்டம் என்பன
யானையின் நடை வகைகள். (95)
பிரச்சோதனன் உதயணனுக்குப் பரிசு
வழங்குதல்
100. பிடிப்புப்பொன் விலைமட்டில்லாப்
பெருவலி யாரந் தன்னை
முடிப்புவி யரச னீய
மொய்ம்பனு மணிந்து கொண்டு
கொடிப்புலி முகத்து வாயிற்
கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீய மொப்ப
விலங்கிய குமரன் றானே.
(இ - ள்.) பொற்கம்பியாற்
கட்டப்பெற்ற விலைமதிக்க வொண்ணா மிக்க
வன்மையுடையதொரு முத்து மாலையை அந்நாட்டு
முடிமன்னனாகிய பிரச்சோதனன் பரிசுப் பொருளாக
உதயணனுக்கு வழங்க இடிபோன்று முழங்கும் அரிமானேறு
போல வீறுடையனாகத் திகழ்ந்த அவ்வுதயணகுமரன்
அம்முத்து மாலையை மகிழ்ந்தேற்று மார்பிலணிந்து
கொண்டு அக்களிற்றினைக் கொடியுயர்த்திய அக்
கோட்டையின் புலிமுக வாயில் மாடவழியாக உள்ளே
ஊர்ந்து வந்தான் என்க. (96)
|