பிரச்சோதனன் உதயணனைத் தழுவிக்
கோடல்
101. சால்கவென் றிறைவன் செப்பத்
தன்னுடைக் கையி னோச்சிக்
கால்களின் விரலி னெற்றி
கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப
மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண
வியந்துடன் தழுவிக் கொண்டான்.
(இ - ள்.) அவ்வளவிலே பிரச்சோதன
மன்னன் தன்கையை வீசிக் கோமகனே இனிக்
களிறூர்தல் அமைவதாக வென்று கூற, மன்னன்
கருதியாங்கு உதயணகுமரனும் தன் கால் விரல்களை
அக்களிற்றின் நெற்றியிலே நன்கு அழுந்த ஊன்றி
அக்களிறு இறங்குதற்குக் காலைமடித்துயர்த்திக்
கொடுப்பக் கீழிறங்கினனாக; வேலேந்திய அழகுடைய
அப்பிரச்சோதனன்றானும் மகிழ்ச்சியுடனே
அவன்பால் வந்து அனைவரும் காணும்படி வியந்து,
ஆர்வத்துடன் தழுவிக் கொண்டனன் என்க. (97)
பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன்கூறி
உறவு கொள்ளல்
102. மருமக னீயே யென்று
மன்னவ னினிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு
மகிழ்ந்துட னிருந்த போழ்தில்
திருமகள் கனவு கூறிச்
செல்வநீ கற்பி யென்னப்
பெருவலி யுரைப்பக் கேட்டுப்
பெருமக னுணர்த்த லானான்.
(இ - ள்.) தழுவிக் கொண்ட
பிரச்சோதனன் எம்மருமை மருமகன் நீயே காண்!
என்று இன்மொழி கூறி அவ்வுதயணன் தன்
கருத்திற்கிணங்கு முறையாலே அவனைப் பெரிதும்
நயந்து உறவு கொண்டு அவனுடன் வீற்றிருந்த பொழுது
ஒருநாள் மிக்க பேராற்றலுடைய அப்பிரச்சோதன
மன்னன் உதயணனை நோக்கி அருமந்த திருமகள்
போலும் மகள் வாசவதத்தை நல்லாள் கண்ட
கனவினையும் கூறி இறைமகனே நீயே எம்மக்கட்கு
வித்தை பயிற்றுவாயாக என்று வேண்டிக் கொள்ள அது
கேட்ட உதயணனும் அம்
|