நாகத்தி னகர ழிந்த
நடுக்கங்க டீர வெண்ணிப்
போகநன் னீரி லாடப்
புரத்தினி லினிது ரைத்தான்.
(இ - ள்.) இனி உதயணனைச் சிறை வீடு
செய்யச் சூள் செய்து கொண்டு செவ்வி
நோக்கியிருந்த யூகி வஞ்சத்தாற் சிறைப் பிடித்த
பிரச்சோதனனுக்கும் வஞ்சனை செய்தே உதயணனை சிறை
மீட்டல் வேண்டும் என்னுந் தன் சூள் தப்பாதபடி
முயலத் துணிந்து அழகிய வொரு குறப்பெண் வேடம்
புனைந்து கொண்டு அந்நகர வீதியிலே சென்று
பலர்க்கும் குறிகள் வகுத்துக் கூறுபவன்
இந்நகரத்தார்க்கு மறலிபோன்ற நகரகிரியாலே
இந் நகரம் சிதைந்த துன்பம் தீரும் பொருட்டு நல்ல
திருநீர்ப் பொய்கையில் நீராடப் போகுமாறும்
அங்ஙனம் நீராடாவிடின் மீண்டும் அக் களிற்றால்
நகரம் சிதைவுறும் என்றும் அந் நகரத்தார்க்கு
இனிதாகக் குறி கூறினான் என்க. (105)
பிரச்சோதனன் முதலியோர் நீராடச்
செல்ல
யூகி நகரத்திற்றீயிடுதல்
110. மன்னவன் றன்னோ டெண்ணி
மாநகர் திரண்டு சென்று
துன்னிய நீர்க்க யத்திற்
றொல்புரப் புறத்தி லாட
நன்னெறி வத்த வன்றான்
னன்பிடி யேறி நிற்ப
உன்னிய யூகி மிக்க
வூரிற்றீ யிடுவித் தானே.
(இ - ள்.) யூகி கூறிய குறிகேட்ட
அம்மாநகரத்து மாந்தர் பெரிதும் அஞ்சி
அரசன்பாற் சென்று அறிவித்து அவனுடன் பாடு பெற்று
அம் மன்னனோடு திரள்திரளாகக் கூடிப்போய்
அந்நகர்ப்புறத்தேயுள்ள நீர் நிரம்பிய அத்
திருநீர்ப் பொய்கையின்கண் நீராடா நிற்பச்
செவ்விதேர்ந்து உதயண குமரனும் பத்திராவதி
என்னுமொரு பிடியானையின் மீதேறி நிற்பச் செவ்வி
இஃதே என்று கருதிய யூகிதானும் தன் மறவர்களைக்
கொண்டும் மகளிரைக் கொண்டும் அவ்வுஞ்சை
நகரத்திற் றீக்கொளுவினன் என்க. (106)
|