பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்49


உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்

111. பயந்துதீக் கண்டு சேனை

பார்த்திபன் றன்னோ டேக

வயந்தகன் வந்து ரைப்ப

வத்தவ குமரன் றானும்

நயந்துகோன் மகளை மிக்க

நன்பிடி யேற்றத் தோழி

கயந்தனை விட்டு வந்த

காஞ்சனை யேறி னாளே.

(இ - ள்.) நகரத்தின்கட் பற்றி யெழுகின்ற நெருப்பினைக் கண்டு படைஞர்கள் அஞ்சிப் பிரச்சோதன மன்னனோடு சொல்லா நிற்ப அச் செவ்வி தெரிந்து வயந்தகன் உதயணன்பால் வந்து யூகியின் கருத்தினைக் கூற அவ்வத்தவ வேந்தனும் பிரச்சோதன மன்னன் வாசவதத்தையைப் பாதுகாக்க வேண்டித் தனது நல்ல பிடியானையி லேற்றிவிட அவள் தோழியாகிய காஞ்சனை என்பாளும் அப்பொழுது அப் பொய்கையை விட்டு வந்து அப்பிடியிலேறினள் என்க. (107)

இதுவுமது

112. வயந்தகன் வீணை கொண்டு

வன்பிடி யேறிப் பின்னைச்

செயந்தரக் கரிணி காதிற்

செல்வன்மந் திரத்தைச் செப்ப

வியந்துபஞ் சவனந் தாண்ட

வேயொடு பற்ற வீணை

வயந்தகன் கூற மன்னன்

மாப்பிடி நிற்க வென்றான்.

(இ - ள்.) காஞ்சனை யேறலும் ஆண்டு நின்ற வயந்தகனும் கோடவதியினைக் கைக் கொண்டு வலிய அந்தப் பிடியானை மிசை ஏறாநிற்பவவும், பின்னர் உதயணன் தனக்கு வெற்றியுண்டாக்குமாறு அந்தப் பிடியானையின் செவியில் மந்திரம் கூறவே அப்பிடிதானும் வியப்புற்று விரைந்து பஞ்சவனம் என்னுமிடத்தைத் தாண்டிச் செல்லும் பொழுது வழியினின்ற தொரு மூங்கிற் கிளை கோடவதி யிற் சிக்கி வீழ வயந்தகன் அதனை உதயணனுக்குக் கூற அவனும் பெருமை பொருந்திய பிடி நங்காய் நிற்பாயாக! என்று கூற வென்க. பஞ்சவனம் - ஐந்து காடுகளை எனினுமாம். (108)

உத-4