பக்கம் எண் :

52உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


நல்ல காரியமே என்று கூற வயந்தகனும் விரைந்து புட்பக நகர் நோக்கிச் சென்றான் என்க. (112)

வேடர்கள் உதயணனை வளைத்துக் கோடல்

117. சூரியன் குடபாற் சென்று

குடவரை சொருகக் கண்டு

நாரியைத் தோழி கூட

நன்மையிற் றுயில்க வென்று

வீரிய னிரவு தன்னில்

விழித்துட னிருந்த போழ்து

சூரிய னுதயஞ் செய்யத்

தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார்.

(இ - ள்.) ஞாயிற்றுமண்டிலம் மேற்றிசையிலே மேலைமலையின்கட் சென்று மறைவதனைக் கண்டு உதயணகுமரன் வாசவதத்தையை நோக்கி “கோமகளே! நின்றோழி காஞ்சன மாலையோடு நன்றாகத் துயில்வாயாக!” என்று பணிப்ப அவ்வாறே அவர் துயிலுங்கால் மாவீரனாகிய அவ்வேந்தன் அற்றை இரவு முழுவதும் துயிலானாய் விழித்து அவர்களைப் பாதுகாத்திருப்ப; அப்பொழுது ஞாயிற்று மண்டிலம் குணதிசையிற் றோன்றும் விடியற் காலத்திலேயே வேடர் பலர் ஒருங்கு கூடி வந்து உதயணன் முதலியோரை வளைத்துக் கொண்டனர் என்க. (113)

உதயணனுடன் வேடர் போர்செய்தல்

118. வந்தவ ரம்பு மாரி

வள்ளன்மேற் றூவத் தானும்

தந்தனு மேவிச் சாராத்

தரத்தினால் விலக்கிப் பின்னும்

வெந்திறல் வேடர் வின்னாண்

வெந் நுனைப் பகழி வீழ

நந்திய சிலைவ ளைத்து

நன்பிறை யம்பி னெய்தான்.

(இ - ள்.) விடியலிலே வந்து சூழ்ந்த அவ்வேடர்கள் உதயணன் மேல் அம்புகளை மழைபோல மிகவும் பொழிய அது கண்ட உதயணனும் ஆக்கமுடைய தன் வில்லை வளைத்து அம்புகளை ஏவி அவ்வேட ரம்பு தங்கள் உடம்பிற் படாதபடி விலக்கி மேலும் நல்ல தொரு பிறைவா யம்பினாலே வெவ்விய ஆற்றலுடைய அவ்வேடர் களுடைய விற்களும் நாண்களும் வெவ்விய அம்புகளும் நிலத்திலே அற்று வீழும்படி எய்தனன் என்க. (114)