பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்53


வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும்,
வயந்தகன் வரவும்

119. செய்வகை யின்றி வேடர்

தீவனங் கொளுத்த மன்னன்

உய்வகை யுங்க ளுக்கின்

றுறுபொரு ளீவ னென்ன

ஐவகை யடிசில் கொண்டே

யானநாற் படையுஞ் சூழ

மெய்வகை வயந்த கன்றான்

வீறமைந் தினிதின் வந்தான்.

(இ - ள்.) வில் முதலியவற்றை இழந்த வேடர்கள் தங்கள் செயலறுதியினாலே உதயணன் முதலியோரிருந்த அக் காட்டிலே தீக் கொளுவக் கண்ட உதயணமன்னன் அவ்வேடர்களை நோக்கி “அன்பர்களே! நீங்களெல்லாம் இனிதே வாழும்படி உங்கட்கு நிரம்ப யான் பொருள் தருவேன் கண்டீர்!” என்று கூறி அந்த வுபாயத்தாலே அவர்களை வயப்படுத்தி யிருக்கும்பொழுது ஊர் சென்ற மெய் நண்பனாகிய வயந்தகன் அழகிய வகைவகையான இனிய அடிசிலும் கொண்டு தமக்கான நால் வேறு படையும் தன்னைச் சூழ்ந்து வருமாறு சிறப்புடனே இனிதாக அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான் என்க. உய்வகையுங்களுக்கினியில்லை என்றும் ஒரு பொருள் தோன்றுதலறிக. (115)

உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்

120. அன்புறு மடிசி லுண்டே யற்றைநாளங்கி ருந்தார்
இன்புறு மற்றை நாளி னெழிற்களிற் றரசனேற
நன்புறச் சிவிகை யேற நங்கைநாற் படையுஞ் சூழப்
பண்புறு சயந்தி புக்குப் பார்த்திப னினிதி ருந்தான்.

(இ - ள்.) அன்பு மிகுதியாலே வயந்தகன் கொணர்ந்த உணவினையுண்டு அனைவரும் அற்றை நாள் அக் காட்டிலேயே தங்கியிருந்தனர். மறுநாள் உதயணகுமரன் ஓர் அழகிய களிற்றியானையில் ஏறிவரவும் மகளிரிற் சிறந்த வாசவதத்தை நல்லாள் அழகிய வெளித்தோற்ற மமைந்த தொரு சிவிகையிலேறி வரவும் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகளும் சூழ்ந்து வரவும் உதயண மன்னன் பண்பாடு மிக்க சயந்தி நகரம் புகுந்து ஆங்கு இனிதே உறைவானாயினன் என்க. (116)

முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றும்.