சேந்தநின் சிறைவிடுத்த
செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன
புரவலநீ கூறென்றாள்.
(இ - ள்.) சாங்கியத்தாயின்
வரவுகண்ட உதயணமன்னனும் பெரிதும் விரும்பி அவட்கு
வழிபாடு செய்து இருக்கை ஈந்து இதன் மிசை
எழுந்தருள்க! என்று வேண்ட அவன்பாற் பண்டே உறவுப்
பண்புடைய அத் தவமூதாட்டியும் பண்புடைய இனிய
வாழ்த்துரைகளும் பிறவுங் கூறி அளவளாவிய பின்னர்,
“முருகனை ஒத்த பேரழகனே! நின்னுடைய சிறையை வீடு
செய்த செல்வனாகிய யூகி நின்னோடு தொடர்ந்து
ஈங்கு வாராமைக்குக் காரணம் என்னையோ? வேந்தே நீ
கூறியருளுக!” என்று வேண்ட என்க. சேந்த-விளி.
சேந்தன்-முருகன். பாந்தவம்-பந்துத்தன்மை. (12)
உதயணன் செயல்
133. அவனுரை யறிந்தில னறிந்தநீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவ டான்படத்தைக்
காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பிமிக
வாடிப்பின்
தவமலி முனிவனைத் தான்வணங்கிக்
கேட்டனன்.
(இ - ள்.) அதுகேட்ட வுதயணகுமரன்
பெரியோய்! யான் யூகியைப் பற்றிய செய்தி ஏதும்
அறிந்திலேன் நீ அறிவதுண்டாயிற் கூறுக! என்று
வேண்ட;
இருக்கையில் வீற்றிருந்த அச்சாங்கிய மகள் தான்
கொணர்ந்த படத்தை மன்னனுக்குக் காட்டினளாக!
(அப்படத்தின்கண் யூகியின் பிணவுருவத்தைக்
கண்டமையால்) மிகவும் அழுது உடல் மெலிவுற்றுப்
பின்னும் ஆற்றாதவனாய் முக்காலமுமுணர்ந்த
முனிவனொருவன்பாற் சென்று வணங்கி யூகியைப் பற்றி
அறிதற்குக் குறிகேட்டான் என்க. (13)
உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை
சூட்டுதல்
134. முடிமுத லரசினோடு
முனிவறநின் றுணைவனை
வடிவுடன் பெறுவையென்ன
வன்மையிற் றேறிமீக்
கடிகமழச் சாரலிற்
கண்டமாத வன்மகள்
துடியிடை விரிசிகையைத்
தோன்றன்மாலை சூட்டினான்.
|