பக்கம் எண் :

68உதயணகுமார காவியம் [ மகத காண்டம்]


உதயணன் மகதநாடெய்துதல்

153. கோட்டுப்பூ நிறைந்தி லங்குங்

கொடிவகைப் பூவுங் கோலங்

காட்டுநந் தேவி யென்று

கால்விசை நடவா மன்னன்

காட்டினன் குன்ற மேறிக்

கானகங் கழிந்து போந்து

சேட்டிளஞ் சிங்க மன்னான்

திருநிறை மகதஞ் சேர்ந்தான்.

(இ - ள்.) மேலும் செல்லும் வழியிலே காணப்படுகின்ற கோட்டுப் பூக்களையும் நிறைந்து திகழுகின்ற கொடிப் பூவகைகளையுங் கண்டு இவை நம்முடைய தேவியின் உறுப்புக்களின் அழகையுடையவனவாய் அருளுருவத்தைக் காட்டுகின்றன என்று புலம்பியவனாய்க் காற்றெனக் கடுகி நடந்து அக்காட்டின்கண் ணமைந்த மலைகளிலே ஏறியும் இழிந்தும் அக்காட்டினைக் கடந்து சென்று பெருமை பொருந்திய இளைய அரிமானேறுபோன்ற அவ்வத்தவன் செல்வமிக்க மகதநாட்டினை எய்தினான் என்க. (3)

உதயணன் முதலியோர் இராசகிரிய நகரத்துப்
புறஞ்சேரியிற் றங்குதல்

154. மருவிய திருவி னானம்

மகதவர்க் கிறைவ னாமம்

தருசக னென்னு மன்னன்

றானைவேற் றலைவன் மாரன்

இருந்தினி துறையு மிக்க

விராசநற் கிரியந் தன்னிற்

பொருந்திச்சென் னகர்ப்பு றத்திற்

பொலிவுட னிருந்தா னன்றே.

(இ - ள்.) பொருந்திய பெருஞ் செல்வமுடையவனும், அந்த மகதநாட்டு மக்கட்கு அரசனும் தருசகன் என்னும் பெயரை யுடையவனும், நாற்படைகளையுடையவனும், வெற்றிவேல் ஏந்துகின்ற வீரர் தலைவனும், காமவேள் போலும் பேரழகுடையவனும் ஆகிய மன்னன் அரசு கட்டிலில் ஏறி இனி துறைகின்ற தலை நகரமாகிய இராசகிரியம் என்னும் மாநகரத்திற் சென்று அந்நகரத்தின் புறஞ்சேரியில் அவ்வுதயணன் தன் தமருடன் பொலிவுற்றுறைந்தனன் என்க. (4)