மருவும்வா சவதத் தைதான்
வந்தன ளென்று ரைப்பத்
திருநகர் மாதுங் கண்டு
திகைத்துளங் கவன்று நின்றாள்.
(இ - ள்.) பெதும்பைப் பருவம்மிக்கு
விளங்குகின்ற மலர் மாலையணிந்த பதுமாபதி
என்பாள் தேரிலேறி வந்து காமகோட்டத்துள்
ஒப்பற்ற காமவேளைக் கண்டு வணங்க அப்பொழுது
ஆங்கிருந்த உதயண மன்னனும் அவளைக் கண்டு
விரும்பித் தான் மருவுகின்ற வாசவத்தையே உயிருடன்
மீண்டுவந்தனள் என்று தன் மனத்தினுள் தனக்குத்
தானே கூறாநிற்பத் திருமகளை ஒத்த அப்பதுமாபதியும்
அவ்வுதயணனைக் கண்டு மனந் திகைத்துக் காமுற்று
வருந்தி நின்றாள் என்க (7)
உதயணனும் பதுமாபதியும் களவுமணங் கூடுதல்
158. யாப்பியா யினியா ளென்னு
மவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற் கண்டு
நலம்பிற வுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமை யோடுங்
காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக் கண்சி வக்குஞ்
சீர்மங்கை நலமுண் டானே.
(இ - ள்.) பதுமாபதி உதயணன்பாற்
காதன்மிக்குக் கலங்குதலும் அவளுடைய உசா அத்துணை
ஆருயிர்த் தோழியாகிய யாப்பியாயினி என்பவள்
செந்நாப்புலவர் புகழ்தற்குக் காரணமான
உதயணமன்னனைக் கண்டு நலம் வினவிப் பிறவுங் கூறி,
அவ்விருவரையும் களவுப் புணர்ச்சியாகக் காம
கோட்டத்திற் கூட்டிய காரணத்தாலே தன்னைக்
காப்பாற்றும் தகுதி வாய்ந்த அப்பதுமாபதியோடு
உதயணமன்னன் கூடித் தலைமயிரை வாருதற்கு அழகிய
சீப்பினைக் கூந்தலிலே இடுமளவிலே கண்கள்
சிவத்தற்குக் காரணமான மென்மைத்தன்மையுடைய
வளும் புகழ் மிக்கவளுமாகிய அப்பதுமாபதியின் இளநல
நுகர்ந்தனன் என்க. (8)
|