உதயணன் தோழர்க்குக் கூறுதலும்
அவருடன்பாடும்
159. எழில்பெறு காமக் கோட்டத்
தியற்கையிற் புணர்ந்து வந்து
வழிபெறு மமைச்ச ரோடு
வத்தவ னினிய கூறும்
மொழியமிர் தந்ந லாளை
மோகத்திற் பிரியே னென்னத்
தொழுதவர் பெறுக போகந்
தோன்றனீ யென்று சொன்னார்.
(இ - ள்.) உதயணகுமரன் அழகிய
காமவேள் கோயிலின்கட் பதுமாபதியைக் கண்டு
யாழோர் மணவியல்பினாலே தோழியிற் கூட்டங்கூடி
மீண்டு இருக்கைக்கு வந்து அங்கு உறைகின்ற தன்
அமைச்சரிடம் இனிய இம்மணச்செய்தியைக்
கூறுவான்:- அன்பரீா!் அமிழ்தம் போன்ற
மொழியினையுடைய அப்பதுமாபதி நல்லாளை யான்
பெரிதும் காமுறுகின்றமையால் அவளைப்
பிரியலாற்றேன் என்றுகூற அது கேட்ட அவ்வமைச்சர்
தாமும் உதயணமன்னனைக் கைகூப்பித் தொழுது
புகழ்மிக்கோய!் தக்கதே கருதினை! அவளின் பத்தை
நீ நீடூழி பெறக் கடவை என்று உடம்பட்டோதினர்
என்க. (9)
உதயணன் பதுமாபதியுடன் கன்னிமாடம்
புகுதல்
160. மாட்சிநற் சிவிகை யேறி
மடந்தைதன் னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளி கைக்குட்
டக்கவண் மனங்கு ளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக்
காவலன் கரந்தி ருப்ப
ஓட்டிய சினத்த னாய
வுருமண்ணு விதனைச் செப்பும்.
(இ - ள்.) உதயணமன்னன் தோழ
ருடன்பாடு பெற்ற பின்னர் ஒரு சூழ்ச்சியாலே பிறர்
அறியாவண்ணம் மாண்புடைய அழகிய சிவிகையின்கண்
பதுமாபதியுடன் ஏறிக் கரவிற்சென்று அவள் தன்
கன்னிமாடம் புகுந்து தாழ்வற்ற அம்மாளிகைக்குள்
தனக்குத் தகுந்தவளாகிய அக்கோமகளோடு
மனங்குளிரக் கூடியிருந்து அவட்கு யாழ்நலம்
உணர்த்தி அங்கேயே கரந்துறையாநிற்ப,
சினமில்லாத சீரிய உளம் படைத்த உருமண்ணுவா
இம்மொழியைத் தன் தோழர்க்குக் கூறுவான் என்க.
(10)
|