பக்கம் எண் :

72உதயணகுமார காவியம் [ மகத காண்டம்]


உருமண்ணுவா வயந்தகன் முதலியோர்க்குக் கூறுதல்

161. ஆகிய தறிந்து செய்யு

மருளுடை மனத்த னான

யூகியங் குஞ்சை தன்னை

யுற்றருஞ் சிறைவி டுக்கப்

போகநற் றேவி யோடும்

போந்தது போல நாமும்

போகுவ மன்னன் மாதைப்

புதுமணம் புணரு வித்தே.

(இ - ள்.) உற்றது கொண்டு மேல்வந்துறு பொருளை அறிந்து ஆவன செய்யும் அறிவாற்றலுடைய அருளுடைய மனத்தையுடைய நல்லமைச்சனாகிய யூகி நம் மன்னன் சிறைப்பட்டிருந்த பொழுது உஞ்சை மாநகரத்தையடைந்து அங்கு அவனைச் சிறை வீடு செய்துழி அம்மன்னவன் அந்நகரத்து மன்னன் மகளும் இன்பமிக்க வளுமாகிய வாசவதத்தையோடு நம் நாட்டிற்கு வந்தது போலவே நாமும் இந்நாட்டுக் கோமகளை நம் மன்னனுக்குத் திருமணம் புணருவித்து நாட்டிற்குச் செல்வோம்; என்றான் என்க. (11)

உருமண்ணுவாவின் செயல்

162. உருமண்ணு வாவ னுப்ப

வுற்றமுந் நூறு பேர்கள்

மருவிய விச்சை தன்னான்

மன்னவன் கோயி றன்னுள்

மருவினர் மறைந்து சென்றார்

மன்னவன் றாதை வைத்த

பெருநிதி காண்கி லாமற்

பேர்க்குநர்த் தேடு கின்றான்.

(இ - ள்.) இவ்வாறு கூறிய உருமண்ணுவா ஏவுதலாலே அவன் சூழ்ச்சிக்குப் பொருந்திய முந்நூறு மறவர்கள் தாம் கற்ற விச்சையாலே மாறுவேடத்தில் மறைந்து அம் மகதமன்னன் அரண்மனைக்குட் புகுந்து வதிந்தனர். இனி அம்மகத மன்னனாகிய தருசகன் தன் தந்தை அரண்மனைக்குள் கரந்து வைத்துப் போன பொருளிருக்கு மிடமறியாமல் அதனைக் கண்டெடுப்பவரைக் காண்டற்கு ஆராய்ந்திருந்தான் என்க. (12)