பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்77


மருவநற் பதுமையா

மங்கைதங்கை தன்னையே

திருநிறைநல் வேள்வியாற்

செல்வற்கே யளித்தனன்.

(இ - ள்.) தனக்கியல்பாக வருவனவாகிய வெற்றிகளுடனே வருகின்ற வத்தவ மன்னனாகிய உதயணகுமரனை மகத மன்னனாகிய தருசகன் எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ச்சியுடன் தனது அரண்மனை புகுந்து, பின்னர் அம்மன்னன் மருவுதற்கினிய பதுமாபதி என்னும் தன் தங்கையாகிய நங்கையைச் செல்வ மிக்க நல்ல திருமண வேள்விவாயிலாய் அச்செல்வச் சிறப்புடைய உதயணமன்னனுக்கு வழங்கினன் என்க. (23)

உதயணன் தருசகன் உதவியுடன் தன் பகைமேற் சேறல்
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒரு தொடர்

174. புதுமணக் கோலமிவர் புனைந்தனரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தே ராயிரத் திருநூறே.

(இ - ள்.) உதயணனும் பதுமாபதியுமாகிய இம்மணமக்களிருவர்க்கும் புதிய மணக்கோலம் புனைவித்து மணவேள்வியில் திருமணம் புணர்வித்த பின்னர் அம்மகத மன்னன் தன்னரண்மனைக் கண்ணவாகிய ஐயாயிரம் புதிய மதக்களிறுகளுடனே புகழ் மிக்கனவாய்க் கூடிய இரண்டாயிரம் குதிரைகளையும் அதிருகின்ற மணிகள் ஒலிக்கின்ற ஆயிரத்திருநூறு தேர்களையும் வழங்கிப் பின்னும் என்க. (24)

175. அறுபதினெண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர்வருட காரியும்
உறுவடிவேற் சத்தியு முயர்தரும தத்தனும்.

(இ - ள்.) அறுபத்தெண்ணாயிரம் காலாண்மறவரையும், நறிய மலர்மாலையணிந்த எண்ணூற்று எண்பது மகளிர்களையும் இவற்றையெல்லாம் உதயணகுமரன் பெறுவானாக என்று அமைத்துவைத்துப் பின்னரும் வருடகாரி என்னும் படைத் தலைவனையும் பொருந்திய கூரிய வேலேந்திய சத்தியென்பவனையும் உயரிய மறப்பண்புடைய தருமதத்தனையும் என்க. (25)