மறவரும் அவ்வெல்லையிலே வந்து
அவ்வுதயண குமரன் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி
அவனுடன் சேர்ந்தனர்; பின்னர் அங்கு நின்றும்
சென்று அனைவரும் செல்வம் பொங்குகின்ற கோசம்பி
நகரத்தின் புறத்தே படைவீடியற்றித் தங்கினர்
என்க. (28)
உதயணகுமரன் வருடகாரனுக்குக் கூறுதல்
179. வருடகா ரனையழைத்து
வத்தவ னியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள
பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத்
திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு
போர்வினை தொடங்கினர்.
(இ - ள்.) அந்தப் பாசறை
யிருப்பின்கண் மகதப் படைத் தலைவருள் ஒருவனும்,
அமைச்சனுமாகிய வருடகாரனை உதயணன் அழைத்து
அவனிடம் ஒருபாயங் கூறி நீ சென்று செருக்குடைய நல்ல
படைகளையுடைய நம் பகைவனாகிய ஆருணி என்னும்
பாஞ்சால ராயனிடம் சென்று அவனுக்குத் துணையாக
வந்துள்ள ஏனைய மன்னர்களை இந்த வுபாயத்தாலே
துணையாகாவண்ணம் பிரித்து விடுக என்று பணிப்ப,
அவ்வருடகாரனும் அக்காரியம் செய்வது பொருளாகப்
போன பின்பு போர்ச் செயலைத் தொடங்குவராயினர்
என்க. பருமிதம் - செருக்கு. (29)
வருடகாரன் துணையரசரைப் பிரித்தலும்
ஆருணி போர்தொடங்கலும்
180. அமைச்சனுஞ்சென் றவ்வண்ண
மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன்
சாலவும்பாஞ் சாலனும்
அமைத்தநாற் படையுட
னமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக
ளக்கதிர் மறைத்தவே.
(இ - ள்.) மகத நாட்டமைச்சனாகிய
அவ்வருடகாரனும் அந்த ஆருணியரசன்பாற் சென்று
உதயணன் கூறியபடியே உபாயத்
|