பக்கம் எண் :

8உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


(இ - ள்.) கற்புடைய திருமகளை யொத்த நங்கையாகிய அம்மிருகாபதி என்னும் அரசியினது வயிற்றின்கண் வாய்மையிலுயர்ந்த தேவன் ஒருவன் வந்துற்றுக் கருவாயுருவாகி நன்மையையுடைய ஒன்பது திங்களும் நன்கு வளர்ந்திருக்க, ஒருநாள் அவ்வரசி மேனிலை நிலாமுற்றத்தே பொலிவுடைய படுக்கைக் கட்டிலின்மேல் வீற்றிருந்தாளாக அப்பொழுது என்க. (8)

மிருகாபதியை ஒரு பறவை எடுத்துப் போதல்

13. செந்துகின் மூடிக் கொண்டு

திருநிலா முற்றந் தன்னில்

அந்தமாய்த் துயில்கொள் கின்ற

வாயிழை தன்னைக் கண்டே

அந்தரத் தோடு கின்ற

வண்டபே ரண்டப் புள்ளொன்

றந்தசை யென்று பற்றி

யன்றுவான் போயிற் றன்றே.

(இ - ள்.) நிறைகருவுடைய அக்கோப் பெருந்தேவி அனந்தரான் மயங்கி அழகிய அந்நிலா முற்றத்தே அப்படுக்கையிலேயே சிவந்த பட்டாடையாலே திருமேனி முழுதும் போர்த்துக் கொண்டு துயிலும் பொழுது அவளை அங்கே வானத்தே பறந்து செல்கின்ற அண்ட பேரண்டப்புள் என்னும் ஒரு பறவை கண்டு அழகிய ஊன் பிண்டம் என்று கருதி மெல்லெனக் கால்களாற் பற்றி எடுத்துக்கொண்டு அற்றை நாளிலேயே வான்வழியே பறந்து போயிற்று; என்க. (9)

14, மற்றவ டந்தை தானு

மாமுனி யாகி நிற்கும்

சற்கிரி விபுல மன்னுஞ்

சாரலவ் வனத்திற் சென்று

நற்றவ னருகில் வைப்ப

நற்றுயில் விட்டெ ழுந்தாள்

பற்றுயி ருண்ணாப் புள்ளும்

பறந்துவான் போயிற் றன்றே.

(இ - ள்.) அவ்வாறு எடுத்துச் சென்ற அந்தப் பறவை தானும் அம்மிருகாபதியின் தந்தையாகிய சேடகமன்னன் உலகினைத் துறந்து போய்ச் சிறந்த முனிவனாகி அவ்வொழுக்கத்தே நிற்கின்ற விபுலம் என்னும் நல்ல மலையைச் சூழ்ந்துள்ள அழகிய காட்டிற் சென்று அம்முனிவன் பக்கலிலே நிலத்திலே வைக்கும்பொழுது