(இ - ள்.) அப்பொழுது ஆருணி மன்னவன்
படைகள் தோற்றமை கண்டு உதயணகுமரன் படைஞர்கள்
ஆரவாரஞ் செய்ய. அது கண்டு தோல்வியுற்ற ஆருணி
மன்னன் மீண்டும் வந்து உதயணனை எதிர்த்துழி
தூயவுள்ளமுடையவனாகி விளங்கும் உதயணகுமரன் தன்
வாட்படையினாலே அப் பகையரசனை மறலி விருந்தாக
உண்ணும்படி அதற்கேற்பத் துண்டந்துண்டமாக வெட்டி
வீழ்த்தினன் என்க. (32)
உதயணகுமரன் கோசம்பி நகருட் புகுதல்
183. பகைய றவேயெ றிந்துடன்
பாங்கிற் போர்வினை தவிர்கென
வகைய றவேப டுகளங்
கண்டு நண்ணிய மற்றது
தொகையு றுந்தன தொல்படை
சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு
நகர வீதியில் வந்தனன்.
(இ - ள்.) இவ்வாறு தன் பகைவன்
அற்றொழியுமாறு அவனைக் கொன்று விழுத்தியவுடன்
இனி நம் படைகள் பக்கத்தே செய்யும்
போர்த்தொழிலைக் கைவிடுக! என்று
கட்டளையிட்டுப் பின் படுகளக் காட்சி வகைகளை
எஞ்சாமற் கண்டு தனக்காக அப்போர்க்களம்
வந்தெய்திய துணைப்படையோடு எண் மிகும் தன் பழைய
படையும் தன்னைச் சூழ்ந்து வருமாறு ஒளியுடைய அழகிய
மார்பையுடைய உதயணகுமரன் தன் தலைநகரத்தை
நோக்கிச் சென்று அக்கோநகரத்து வீதியிலே
வந்தனன் என்க. (33)
(வேறு)
உதயணன் அரண்மனை புகுதல்
184. மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன்.
(இ - ள்.) உதயண மன்னன் நகர் வலம்
வரும் பொழுது அந்நகர்வாழ் மாதர் தாமும்
இருபக்கங்களினுமுள்ள மாடமாளிகையின் மேலேறிக்
கூடிநின்று வெற்றியோடு வருகின்ற அக் கொற்றவனை
வாழ்த்துப்பாடி வரவேற்றனர். பாடகர்கள்
பல்லாண்டு பாடிவரப் பல்வேறு கொடிகளும்
நெருங்கியழகு செய்கின்ற பொன்னாலியன்ற தனது
அரண்மனையிற் புகுந்தனன் என்க. (36)
உத-6
|