(இ - ள்.) சிறையினின்று மீண்ட
உருமண்ணுவா மகதத்தினின்றும் வந்து கோசம்பி
நகரிலே புகுந்து உதயணன் திருமுன் சென்று அடிகளிலே
வீழ்ந்து வணங்கி எழுந்து வாய்வாளாநிற்ப;
உதயணன் தன்னெதிரே நிற்பவன்
உருமண்ணுவா வென்னும் அறிவுமிக்க அமைச்சனே
என்றுணர்ந்து கொண்டு ஆர்வத்துடன் எழுந்துசென்று
தழுவிக்கொண்டு இறந்தொழிந்தவன் உயிர்பெற்று
எதிரே வந்தாற்போன்று வந்த அவ்வமைச்சனுக்கு
அவன் றகுதிக் கேற்ற முகமன் கூறி மிக்க அவாவுடைய
தன் தனிமைத் தன்மை யுந் தீர்ந்து
அன்புணர்ச்சியினா லின்பமுற்றான் என்க. (10)
யூகி முதலியோர் வாசவதத்தையைக்
கோசம்பிக்குக் கொணரல்
196. வாரணி கொங்கை வேற்கண்
வாசவ தத்தை தானும்
ஊரணி புகழி னான
யூகியு மற்றுள் ளாரும்
தாரணி கொடியி லங்குஞ்
சயந்தியி னின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற்
பன்மலர்க் காவுள் வந்தார்.
(இ - ள்.) இனி, கச்சணிந்த
முலையினையும் வேல்போலும் கண்களையும் உடைய
வாசவதத்தையாகிய கோப்பெருந்தேவியும், தன்
புகழினால் தன்னகரத்திற்கு அணிகலனாகத்
திகழ்கின்ற யூகி என்னும் அமைச்சனும்
சாங்கியத்தாய் முதலிய ஏனையோரும் மாலை
சூட்டப்பெற்ற கொடிகள் விளங்குகின்ற சயந்தி
நகரத்தினின்றும் வந்து உலகிற்கு அணிகலனாகத்
திகழ்கின்ற கோசம்பி நகரத்தின் கண்ணமைந்த
தொரு பல்வேறு மலர்களையுடைய பூம் பொழிலினுடே
புகுந்தனர் என்க. (11)
உதயணன் யூகி முதலியோரை வினவுதல்
197. நயந்தநற் கேண்மை யாளர்
நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தக னுரைப்பக் கேட்டு
வந்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப்
பண்புடன் றழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள்
வேறுடன் மறைந்த தென்னை.
|