(இ - ள்.) உதயண குமரனைப் பெரிதும்
விரும்பிய நல்ல கேண்மையுடையோராய் நன்கு
பொருந்திய அமைச்சர்களுள் வைத்து வயந்தகன்
என்னும் அமைச்சன் யூகி முதலியோரின் வரவினைத்
தனக்குக் கூற அதுகேட்ட அம்மன்னவன் அவர்
உறைகின்ற பூம்பொழிலை எய்தாநிற்ப, அவன்
வரவுகண்ட யூகி முதலியோர் அஞ்சியவராய்
அவன்திருவடிகளிலே வீழ்ந்து வணங்க, உதயணன்
நட்புப்பண்போடு அவர்களை அன்போடு வியந்து
தழுவிக் கொண்டு பின்னர் அவ்வரசன் நீங்கள்
வேற்றுருவிலே இங்ஙனம் கரந்துறைதற்குக் காரணம்
என்னையோ? என்று வினவ என்க;
என்று வினவ
என்று வருவித்து முடிக்க. (12)
யூகி காரணம் கூறுதல்
198. இருநில முழுதும் வானு
மினிமையிற் கூடி னாலும்
திருநில மன்ன ரன்றிச்
செய்பொரு ளில்லை யென்று
மருவுநூ னெறியி னின்றி
வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றா
னரசனு மகிழ்வுற் றானே.
(இ - ள்.) அது கேட்ட யூகி “பெருமானே!
பெரிய இந்நில வுலகத்தே யாண்டும் வாழ்கின்ற
மாந்தரும் தேவருலகத்தே வாழுகின்ற எல்லாத்
தேவர்களும் அன்பினால் இனிதே ஒருங்கு கூடினாலும்
தம் அழகிய உலகத்தை ஆளுகின்ற செல்வமிக்க
மன்னரைப் பெறாராயின் தாங்கள் செய்தற் கியன்ற
காரியம் யாதுமில்லையாகிவிடும்;
ஆதலாலே (பெருமான் அரசுரிமையைக்
கைவிட்டிருந்தமையாலே மீண்டும் அவ்வுரிமையை
மேற்கோடற் பொருட்டு) பொருந்திய அரசியனூல்
கூறுமாற்றாலன்றியும் வன்மையாலே இச்சூழ்ச்சியை
அடியேனே செய்தேன்! எம்பெருமான் அருள் கூர்ந்து
அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளுக! என்று
வேண்டினன், அதுகேட்ட மன்னவனும் பெரிதும்
மகிழ்ந்தனன் என்க. (13)
உதயணன் வாசவதத்தை முதலியோரொடு
மகிழ்ந்திருத்தல்
199. ஆர்வமிக்க கூர்ந்து நல்ல
வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ்
செல்வனு மனைபு குந்தே
|