பக்கம் எண் :

92உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


நெஞ்சம் குழம்பாத வகையினாலே அவளது நலம் பாராட்டி மெல்ல மெல்ல அவளது ஊடலை அகற்றி வெவ்விய களிப்பையுடைய களிற்றியானை தன் காதற்பிடியானையோடு கூடி மகிழ்வதேபோன்று பூரித்த அவ்வாசவதத்தையின் இளமுலைமேற் பூசப்பட்ட நறுமணச் சாந்தம் அழியும்படி உறத் தழுவி அச்செல்வியைப் புணர்ந்து மகிழ்ந்தான் என்க. (17)

இதுவுமது

204. உருவிலி மதன்க ணைக

ளுற்றுடன் சொரியப் பாய

இருவரும் பவளச் செவ்வா

யின்னமிர் துண்டு வேல்போல்

திருநெடுங் கண்சி வப்ப

வடிச்சிலம் போசை செய்ய

மருவிய வண்டு நீங்க

மலர்க்குழல் சரிய வன்றே.

(இ - ள்.) அவ்விருவர்மீதும் உருவமில்லாத காமவேளும் தன் மலரம்புகளை ஒருங்கே ஏவுதலாலே உதயணன் அச்செல்வியின் பவளம்போன்று சிவந்த வாயூறலாகிய இனிய அமிழ்தினைப் பருகியும் வேல்போல மிளிருகின்ற கண்கள் சிவப்பாயும் அடியிலணிந்த சிலம்புகள் முரலவும் பொருந்திய வண்டினங்கள் அஞ்சியகலவும் மலர்சூடிய கூந்தல் சரிந்து வீழவும் என்க. (19)

இதுவுமது

205. கோதையும் சுண்ணத் தாதுங்

குலைந்துடன் வீழ மிக்க

காதலிற் கழுமி யின்பக்

கரையழிந் தினிதி னோடப்

போதவும் விடாது புல்லிப்

புரவல னினிய னாகி

ஏதமொன் றின்ரிச் செங்கோ

லினிதுடன் செலுத்து நாளில்.

(இ - ள்.) மலர் மாலையும் நறுஞ்சண்ணப்பொடியும் குலைந்து வீழவும், மிகுந்த காதலில் நிறைந்து இன்பவெள்ளம் வரம்பு கடந்து இனிதாக ஒழுகாநிற்பவும், அவள் பிரிந்துபோகவும்விடமனமின்றித் தழுவிப் பேரின்பமுடையவன் ஆகி அரசியலிலும் சிறிதும் பிழை படாவண்ணம் செங்கோல் செலுத்துகின்ற நாளிலே என்க. (20)