பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்93


உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்

206. ஆனதன் னாம மிட்ட

வாழிமோ திரத்தை யீந்தே

ஊனுமிழ் கதிர்வேன் மன்ன

னுருமண்ணு வாவு தன்னைச்

சேனைநற் பதிநீ யென்று

திருநிகர் பதுமை தோழி

ஈனமி லிராச னையை

யெழில்வேள்வி யாற்கொ டுத்தான்.

(இ - ள்.) மன்னனான தனதுபெயர் பொறித்த மோதிரத்தை உருமண்ணுவா வென்னும் அமைச்சனுக்கு வழங்கி ஊன் கொப்பளிக்கும் ஒளிவேலுடைய உதயணன் அவ்வமைச்சனைப் படைகட்கெல்லாம் தலைவன் நீயே என்று அப்பதவியையும் வழங்கித் திருமகளை நிகர்த்த பதுமாபதியின் தோழியாகிய குற்றமற்ற இராசனை என்னும் நங்கையையும் அழகிய திருமண வேள்வி வாயிலாய் அவ்வமைச்சனுக்கு மனைக்கிழத்தியாக வழங்கினன் என்க. (21)

உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் ஊர் வழங்குதல்

207. சயந்தியம் பதியுஞ் சால

விலாவாண நகரு மீந்தே

இயந்தநல் லிடப கற்கு

மினியபுட் பகத்தைச் சூழ்ந்த

செயந்தரு வளநன் னாடு

சிறந்தவைம் பதும ளித்து

வயந்தகன் றனக்கு வாய்ந்த

பதினெட்டூர் கொடுத்தா னன்றே.

(இ - ள்.) பின்னர் அம்மன்னவன் அவ்வுருமண்ணுவாவிற்குச் சயந்தி நகரத்தையும் மிகுதியாக இலாவாணக நகரத்தையும் வழங்கி, அவனோடு அமைச்சனாக வியைந்த இடபகனுக்குப் புட்பக நகரத்தைச் சூழ்ந்த வெற்றி நல்கும் வளமிக்க நல்ல ஐம்பதூர்களை வழங்கிப் பின்னர் வயந்தகனுக்குப் பொருந்திய பதினெட்டூர்களையும் வழங்கினன் என்க. (22)