பக்கம் எண் :

94உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


யூகிக்கு ஊர் வழங்குதல்

208. ஆதிநன் மாமன் வைத்த

வருந்திறை யளக்கு நல்ல

சேதிநன் னாட்டை யூகிக்

காகநற் றிறத்தி னீந்து

சோதிநல் லரசன் மிக்க

சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்

வீதிநன் னகர்கள் விட்டு

வீறுடன் வீற்றி ருந்தான்.

(இ - ள்.) புகழொளி படை.த்த உதயணமன்னன் பண்டு தன் மாமனாகிய விக்கிரமன் தன்பால் அரசுரிமை செய்து வைத்த சேதி நாடென்னும், பெறற்கரிய திறைப்பொருளைப் பிற மன்னர்கள் கொணர்ந்து அளத்தற்குக் காரணமான நல்ல நாட்டினை யூகிக்குப் பரிசிலாகச் சிறப்புடன் வழங்கி, மிக்க ஆராய்ச்சியினாலே ஏனையோர்க்கும் வரிசையறிந்து தெருக்களையுடைய நல்ல நகர்கள் பலவற்றையும் முற்றூட்டாக விட்டு வேறொரு வேந்தனுக்குமில்லாத சிறப்போடே அரசு கட்டிலில் வீற்றிருந்து செங்கோலோச்சினன் என்க. (23)

உதயண குமரன் பிரச்சோதனன் உய்த்த திருமந்திரவோலை பெறல்

209. பேசரும் பெருமை சால்ப்ரச்

சோதனன் றூதர் வந்து

வாசகந் தன்னைக் காட்ட

வந்தவன் மனம கிழ்ந்து

வாசவ தத்தை யோடு

மன்னிய வமைச்சர் கூட

வாசகஞ் சொல்க வென்று

வரிசையிற் கேட்கின் றானே.

(இ - ள்.) இங்ஙனம் நிகழுநாளில் ஒரு நாள் சொல்லுதற்கரிய பெருமை மிக்க அவந்தியரசனாகிய பிரச்சோதனன் விடுத்த தூதர் சிலர் வந்து அவ்வேந்தனுடைய திருமந்திர வோலையை உதயணனுக்கு வழங்க, தன் மாமடிகள் உய்த்த ஒலை பெற்ற மன்னவன் மன மகிழ்ந்து வாசவதத்தை நல்லாளும் நிலைபெற்ற அமைச்சர்களும் தன்னுடனிருப்புழி ஏடு படிப்பானிடம் அவ் வோலையை யீந்து இதன்கண் வரையப்பட்ட மொழிகளை ஓதுக! வென்று பணித்து ஆர்வத்தோடு கேட்பானாயினன் என்க. (24)