பிரச்சோதனன் ஓலையிற் கண்ட செய்தி
210. பிரச்சோத னன்றா னென்னும்
பெருமக னோலை தன்னை
உரவுச்சேர் கழற்கான் மிக்க
உதயண குமரன் காண்க
வாவுச்சீர்க் குருகு லத்தின்
வண்மையான் கோடல் வேண்டி
வரைவனச் சார றன்னில்
வன்பொறி யானை விட்டேன்.
(இ - ள்.) “அவந்தியர்
கோமானாகிய பிரதச்சோதனன் என்னும் வேந்தன்
வரைந்த இந்தத் திருமந்திர வோலையினை வலிமை
மிக்க மறக்கழலணிந்த மன்னருள் மிக்க மன்னனாகிய
உதயண குமரன் கண்டருளுக! பெருஞ்சீர்த்தி இடையறாது
வருதலையுடைய குருகுலத்தின்கண் யான் மகட் கொடை
செய்துறவுகோடலைப் பெரிதும் விரும்பி மலையையுடைய
காட்டின்கண் வன்மையுடைய பொறியானையை நின்பால்
விடுத்தேன் என்க. (25)
இதுவுமது
211. கலந்தவை காண வந்த
காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூ றன்னா லார்த்த
சிங்கம்போ லார்த்துக் கொண்டு
நலந்திகழ் தேரி னேற்றி
நன்குவுஞ் சையினி தன்னிற்
பெலந்திரி சிறையில் வைத்த
பிழையது பொறுக்க வென்றும்.
(இ - ள்.) கண்டேன்
அரசவையத்தாரொடு கலந்து ஆராய்ந்தவாறே
அக்களிற்றின் பின்னர்க் காவலாக நின்னைக் காண
வந்த மறவர் நின்னைப் பற்றிச் சிலந்தி நூலாலே
சிங்கவேற்றினைக் கட்டினாற் போன்று நின்னைக்
கட்டி அழகாற் றிகழுந்தேரிலேற்றி நலமாக எமது
உஞ்சைமா நகரிற் கொணர்ந்து வலிமை குன்றுதற்குக்
காரணமான சிறைக்கோட்டத்தில் வைத்ததாகிய எமது
பெரிய பிழையினைப் பெருமான்! பொறுத்தருளுக!
எனவும், என்க. (26)
|