பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்97


தன்னெஞ்சத்தே நிலை பெற்ற மகிழ்ச்சி காரணமாக அவ்வமைச்சன் மகிழ்தற்குக் காரணமான முகமன் மொழிகளைக் கூறினன் என்க. (28)

பிரச்சோதனன் முரசறைவித்தல்
(கலிவிருத்தம்)

214. சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கௌ சாம்பியும்
பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்
ஆர்மிகு முரச மறைகென நகரில்
தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன்.

(இ - ள்.) யூகியை வரவேற்ற பின்னர்ப் பிரச்சோதன மன்னன் முரசவள்ளுவரை அழைத்து இற்றை நாள் தொடங்கி நம் குடி மக்கள் சிறந்த பொழிலையுடைய நந்தமுஞ்சை நகர்க்கும் சிறப்புடைய கோசம்பி நகர்க்கும் இவ்வுலகின்கண் வேற்றுமை சிறிதும் கொள்ளுதல் வேண்டா! இரண்டு நாட்டு மாந்தரும் ஒரு நாட்டு மாந்தராகவே ஒற்றுமையுடன் வாழக்கடவர்! இது நம்மாணை என்று நகரெங்கும் ஆரவாரமிக்க முரசினை முழக்கி, அறிவிப்பீராக! என்று தகுதியோடு பணித்தவன் என்க. (29)

யூகியை அரசன் பாராட்டல்

215. தருமநன் னூல்வகை சாலங் காயனோ
டருமதி யூகியு மன்பி னுரைத்தான்
பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்
திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான்.

(இ - ள்.) நல்ல அற நூல்களை வகுக்கும் தருக்கத்தைப்பற்றி யூகி அவந்தியமைச்சன் சாலங்காயன் என்பவனோடு அன்போடு சொற்போர் புரிந்து வென்று மகிழ்ந்திருந்தனனாக, பெரிய வெற்றியையுடைய பிரச்சோதன மன்னன்றானும் செல்வமிக்க யூகியை நோக்கிச் “சான்றோனே! நின் கேண்மை எம்மனோர்க்குப் பெறுதற்கரியதொரு பேறேயாம்!” என்று கூறி மகிழ்ந்தனன் என்க. (30)

இதுவுமது

216. கவ்விய தகலமுங் காட்சிக் கினிமையும்
சொல்லருஞ் சூட்சியுஞ் சொற்பொருட் டிண்மையும்
வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்
றெல்லையில் குணத்தின னென்றுரை செய்தனன்.

உத--7