(இ - ள்.) பரதகன் என்னும் அமைச்சனுடைய
தங்கையான பால் போன்ற மொழியினையும் வேல்
போன்ற கண்ணையும் உடையவளும், ஆகிய செல்வமிக்க
இந்நிலவுலகத்து வாழ்வோரெல்லாம் புகழ்தற்குக்
காரணமான திலதசேனை என்பவளையும் இப்பேருலகம் அறியும்படி
திருமணம் புணர உடன்பாடு பெற்றுப் பெறற்கரிய அறிஞனாகிய
யூகிக்கு வழங்கினன் என்க. (34)
யூகி வத்தவ நாடு புகுந்து உதயணனைக் காண்டல்
220. சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்
நன்முது நகர்முன் னாடிப் போவெனப்
பன்மதி சனங்கள் பரவி வழிபட
வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன்.
(இ - ள்.) பின்னர் அப்பிரச்சோதன
மன்னவன் யூகியை நோக்கி, “அறிஞனே! நின் மன்னன்
நிற் பிரிந்து வருந்தியிருப்பனாகலின் நீயினி நல்ல
பழைய நகரமாகிய கோசம்பிக்குச் செல்லுதல் வேண்டும்;
ஆதலால் நீ செல்க!” என்று விடுப்ப வெல்லுதற்கியன்ற
பேரறிவுபடைத்த யூகியும் உடம்பட்டுப் பல்வேறு அறிவுத்திறம்
படைத்த மாந்தரெல்லாம் ஒருங்கே வாழ்த்தி வழிபடவும்
அவ்வுஞ்சையினின்றும் போய்க் கோசம்பி புகுந்து
உதயணமன்னனைக் கண்டு வணங்கினன் என்க. (35)
தேவிமார் உதயணனைப் பந்தடிகாண அழைத்தல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
221. வத்தவ குமரன் பாதம்
வந்தனை செய்த மைச்சன்
இத்தல முழுது மாளு
மினியநன் மாமன் சொன்ன
ஒத்தநன் மொழியைக் கேட்டே
யுவந்துட னிருந்த போழ்தில்
சித்திரப் பாவை மார்கள்
செல்வனை வணங்கிச் சொல்வார்.
(இ - ள்.) யூகி கோசம்பி நகரம் புகுந்து
தன் கொற்றவனாகிய உதயணகுமரன் திருவடிகளை வணங்கி
இந் நிலவுலகம் முழுதும் ஆளாநின்ற மன்னனான இனிய மாமடிகள்
கூறிய தமக்கும் பொருந்திய நல்ல மொழிகளையும் அந்த
யூகி கூறக்கேட்டு மகிழ்ந்து அவ்வமைச்சனுடன் இன்புற்றிருந்த
பொழுது ஓவியத்தில் வரையப்பட்ட பாவை போன்ற
அழகிய தேவிமார்கள் உதயணன்பால் வந்தெய்தி வணங்கிக்
கூறுவார்; என்க. (36)
|